ஒரு பிடி சோறா ?

Posted by அகத்தீ Labels:




ஒரு பிடி சோறா ? முழுவயிறா ?
---------------------------------------------------------------------------------

ஒருபிடி சோறா ? முழுவயிறா ?
உனக்கெது தேவை ? முடிவெடுடா !
வேட்டி சேலை இலவசமா ?
வேலைக் கேற்ற சம்பளமா ?
உனக்கெது தேவை முடிவெடுடா !
உன் விரல் நுனியில் உலகமடா !
                                                           [ ஒரு பிடி ..]

கிராமமும் வளரணும் நகரமும் வளரணும்
அதுவே நாம் சொல்லும் வளர்ச்சி ! – சரியான வளர்ச்சி
வயிலில்  செழிக்கணும் தொழிலில்  நிலைக்கணும்
காசு பணம்  கையில் புழங்கணும் –  மக்கள் கையில் புழங்கணும்
                                               
                                                                   [ ஒரு பிடி..]

கல்வியும் வேலையும் கனிந்து கிடைக்கணும்
அறிவியல் நுட்பத்தில் இணைந்து நடக்கணும் – துணிந்து நடக்கணும்
அகிலம் போற்ற சாதனை படைக்கணும்
சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கணும் – துணிந்து நிற்கணும்

                                                                              [ ஒரு பிடி ]

அடித்தளம் இல்லா கட்டிடங்கள்  என்றும்
இடிக்கும் மழைக்கும் தாங்காது –நொடியும் தாங்காது
அடித்தள  மனிதன் உயர்த்தாமல் விடியாது – பொழுது விடியாது
இடதுசாரி பாதையிலே நடைபோடு ! விடை தேடு !


[ சிபிஎம் மாநில மாநாட்டின் போது வெளியிடப்பட்ட முனு கோட்டீஸ்வரன் இசையில் ‘மக்கள் பாடல்’ ஒலிப்பேழையில் என் பாடல் .. நான் எழுதிய முழுவடிவம் இது ]




உங்கள் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது ?

Posted by அகத்தீ Labels:



உங்கள் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது ?

சு.பொ.அகத்தியலிங்கம் .

    “வணக்கம் ! உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றேன்”

 “ வாங்க !அங்கிள் ! உட்காருங்க !” என அன்போடு அழைத்து நாற்கலியை இழுத்துப் போட்டனர் . அவர்களும் கட்டிலிலும் சோபாவிலுமாக உட்கார்ந்தனர் . இந்த இளம் பெண்கள் தமிழ்நாட்டின் பலபகுதியைச் சார்ந்தவர்கள் . பெங்களூரில் பணியாற்றுபவர்கள் . ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்கள் . அறையை வாடகைக்கு கூட்டாக சமைத்து சாப்பிட்டு வாழ்கிற பெண் பேச்லர்கள் .

 “ ஒண்ணும் இல்லேம்மா ! ஒரு டவுட்டு ! ஆறுமாசத்துக்கு முன்னாடி நீங்க பெங்களூருக்கு வந்த போது எப்படி இருந்தீங்க ! உங்க உடை ! உணவு ! பழக்க வழக்கம் எல்லாம் எப்படி ஆறுமாசத்தில தலைகீழா மாறிப்போச்சு ! இரவு 12 மணிக்கு பீசா கார்னரில் உட்கார்ந்திருக்கீங்க ! எப்படியம்மா இந்த தலை கீழ் மாற்றம் !”

“ அங்கிள் ! தப்பா நினைக்க மாட்டீங்க தெரியும் ! எல்லா பெண்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமா திரியணும்னு ஆசைப்படுறவங்கதான் ! வாய்ப்பு கிடைக்காத போது வேறு வழியே இல்லை ! வாய்ப்பு கிடைச்சா ! நிச்சயம் நூற்றுக்கு தொண்ணுறு பெண்கள் தங்களை மாற்றிக்குவாங்க !”

“ சரி ! உங்க அம்மா அப்பா ! எதுவும் சொல்ல மாட்டாங்களா ?”

 “ இப்போ நாங்க கைநிறைய சம்பாதிக்கிறோம் ! அதுனால கடுமையா அவங்களால எதுவும் சொல்ல முடியாது ! இதுல வேடிக்கை பாருங்க அங்கிள் ! அப்பா அம்மா இருண்டு பேருமா இருக்கச்சே  கொஞ்சம் கண்டிக்கிற மாதிரி சொல்லுவாங்க ! தனியா இருக்கச்சே அம்மா சொல்லுவா ‘ எங்க காலத்தில நாங்க ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கலே !சோற்றுக்கும் துணிக்கும் ஆம்பளைகள எதிர்பார்த்திருந்தோம் . என்ன செய்ய முடியும் ? உங்க கையில காசு இருக்கு !நீங்களாவது அனுபவிக்கிறீங்க சந்தோஷமா இருக்கு .’ இப்படி சொல்றது மட்டுமில்ல அம்மா மனசுக்குள்ளே எவ்வளவு சின்னச்சின்ன ஆசைகளைக்கூட புதைச்சி வச்சிருக்காங்க ! நாங்க .. கொஞ்சம் ஒரு மில்லி மீட்டர் மாற முயலுகிறோம் அவ்வளவுதான்..”

“ சரி ! அப்பா தனியா ஏதாச்சும் சொல்வாரா ? போங்க  அங்கிள் ! சும்மா மீடியாக் காரன்னு நிரூபிக்கிற மாதிரி கேள்வியாய் கேட்கிறீங்க ! உங்களுக்குத் தெரியும் ! அப்பாக்களுக்கு எப்பவுமே பொண்ணுக செல்லம்தானே ! காலம் மாறிக்கிட்டிருக்கு நாம பழசுலேயே இருக்க முடியுமான்னு எங்கள் கிட்ட சாமாதானம் பேசிடுவாங்க !”

ஒரு பொண்ணு சொன்னாள் , “ எங்க அம்மா அடிக்கடி எங்க அப்பாட்ட சொல்வாங்க அது என்ன நீங்க பெற்ற பொண்ணு மட்டும் உங்களுக்கு உசுரு ! யாரும் அவள ஒண்ணும் சொல்லக்கூடாது !நானு யாரோ பெற்ற பொண்ணுதானே ! என்ன வேணும்னாலும் சொல்லலாம் அப்படித்தானே .. ..”

இன்னொரு பொண்ணு இடைமறைத்தாள் , “ நேற்று அமிதாபச்சன் மருமகள் ஐஸ்வர்யராய் என்ன சொன்னாங்க தெரியுமா ? பெண்ணின் தேவைகளையும் அபிலாசைகளையும் குடும்பத்தார் ஒரு போதும் புரிந்து கொள்வதில்லை ..கோடீஸ்வரியா இருந்தாலும் இதுதான் நிலைமை..”

இன்னொரு பெண் சொன்னாள் , “ அங்கிள் ! நாளைக்கே எங்களுக்கு கல்யாணம் ஆயிடலாம் ! வர்றவன் எப்படி இருப்பான் யாருக்குத் தெரியும் ஆனால் ஒண்ணு எல்லா அம்பிளைங்களும் அதிகாரத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுருவாங்களா என்ன ?”

இப்படி எங்கள் உரையாடல் நீண்டது . ஒவ்வொரு பெண்ணும் ஆடை விஷயத்தில் அட்டுமல்ல எல்லாவற்றிலும்  தனக்கு முழுசுதந்திரம் இருக்க வேண்டுமென்றே விரும்புகிறாள் . தங்கள் மீது ஆண்கள் அதிகாரம் செலுத்துவதாகக் கருதுகிறாள் ! இதில் கிராமம் நகரம் எதிலும் வேறுபாடு கிடையாது ! ஆனால்  மீற பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை ! கிடைத்தால் விடுவதில்லை ! இதுவே யதார்த்தம் ! ஆண்கள் மனைவியிடம் ஒரு போதும் நியாயமாக நடந்து கொள்ளமாட்டார்கள் அதிகாரமே செலுத்துவார்கள் என இவர்கள் நம்புவது பிழையாமோ !

“ உங்கள் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது ?”

இக்கேள்விக்கு டக்குன்னு ஆண்கள் சொல்லுவாங்க ,” கடலின் ஆழத்தை கண்டாலும் பொம்பள மனசின் ஆழத்தைக் காணமுடியாது”.

இதைவிட நழுவல் பதிலை வேறெதிலும் காணமுடியாது .உண்மை என்னவெனில் காலங்காலமாய் மதம் , சாதி , சம்பிரதாயம் இவற்றின் பேரால் பெண்களின் ஆசைகளை தடுத்தும் ; உணர்வுகளை மிதித்தும் மனதை ரணமாக்கிவிட்டது சமூகம் ! ஆண்கள் மனம்போல் மேய்ந்துதிரிய பெண்களின் மனதுக்கு மிகப்பெரிய பூட்டை மாட்டிவிட்டது . அதனை திறப்பதற்கான சாவியைக்கூட தங்கள் இடுப்பில் சொருக்கிக்கொண்டு திரிகிற கூட்டம்தான் இப்படி கூசாமல் பெண்மனதின் ஆழத்தை பகடி செய்கிறது . இப்போது நீராவியின் அழுத்தம் அதிகமாகி கொதிகலனின் மூடியைத் தள்ளி கொஞ்சம் வெளிவருகிறது ! இதைக் கண்டு மிரண்டால் எப்படி ! கொதிகலன் வாயை மத சாதி மூடியால் இறுக மூட எத்தணிப்பவது பெரும் அழிவுக்கே வழிகோலும் !



மும்பையைப் போல் டெல்லியோ ; டெல்லியைப் போல் பெங்களூரோ ! பெங்களூரைப் போல சென்னையோ , சென்னையைப் போல் நெல்லையோ மாறவில்லை என கூறலாம் ; கிராமம் வேறு நகரம் வேறு என வாதிடலாம் ; ஆனால் மாற்றம் தீயைப்போல எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது .. தொலைதூரக் கிராமத்தின் கடைசி குடிமகள் முதல் டெல்லி முதல் குடிமகள் வரை பெண்களின் உள்ளத்தில் சமத்துவச் சூறாவளி மையம் கொண்டுள்ளது .


இதனை உணராமல் கலாச்சாரக் காவலர்கள் வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கி சுழற்ற எத்தணிக்கிறார்கள் ; சூறாவளி சுழன்றடிக்கும்போது சின்னா பின்னாமாய் சிதறிக்கப்படுவார்கள் !


எக்களிப்பு கொள்ளுதடா பறையோசை எங்கும்!

Posted by அகத்தீ Labels:









எக்களிப்பு கொள்ளுதடா பறையோசை எங்கும்!


சு.பொ.அகத்தியலிங்கம்


 “அறுபது வருடங்களில் காதலை
கதைத்துவிட
 முடியாது என கற்றுக்கொண்டேன்”

என்பார் கவிஞர் மில்டன் .அதனால்தான் 62 வயதில் காதலைப் பற்றி அதுவும் 
இலக்கியக் காதலைப் பற்றி எழுதுங்கள் என்கிறதோஇளைஞர் முழக்கம் என்னிடம் .

சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாகஇருக்கின்றன 
என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும் திறந்துவைத்த சமூகமாகவேதோன்றும். அக்காலத்து 
அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும் உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பியசமூகத்தை 
உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 
சங்க இலக்கியத்தில்சுமார் 89 இடங்களில் காதல் என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன். 
காதல் என்பதைக்குறிக்கக் காமம் என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. 
இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும்சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன 
என்றும் கூறுகிறார் அவர். –  இதனை பிரபஞ்சன் ஒருகட்டுரையில் மேற்கோள்காட்டியுள்ளார் .


சங்க
 இலக்கியமான எட்டுத்தொகையில் இடம் பெற்ற  கலித்தொகையில் கபிலர் பாடிய ஒரு பாடலைப்பார்ப்போம்.  அற்புதமான காதல் காட்சி நம் கண் முன்னே தோன்றும் . தமிழ் திரைப்பட உலகம் ஒரு வேளை இதிலிருந்து காப்பி அடித்திருக்குமோ எனத் தோன்றுகிறது . 

 “சுடர்த் தொடீ இ! கேளாய் தெருவில் நாம் ஆடும் 
மணல்
 சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய 
கோதை
 பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி, 
நோதக்க
 செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள் 
அன்னையும்
 யானும் இருந்தேமா..இல்லிரே! 
உண்ணுநீர்
 வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை, 
அடர்பொற்
 சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்! 
'உண்ணுநீர்
 ஊட்டிவா' என்றாள் என யானும் 
தன்னை
 அறியாது சென்றேன்; மற்று என்னை 
வளைமுன்கை
 பற்றி நலியத் தெருமந்திட்டு, 
அன்னாய்!
 இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா, 
அன்னை
 அலறிப் படர்தரத் தன்னையான் 
உண்ணுநீர்
 விக்கினான் என்றேனா, அன்னையும் 
தன்னைப்
 பறம்பு அழித்து நீவ மற்று என்னைக் 
கடைக்கண்ணால்
 கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம் 
செய்தான்
 அக் கள்வன் மகன்.”



அவன் சிறு
 வயது முதல் அவளுடன் ஒன்றாகப் பழகி விளையாடியவன் . பருவ வயதில் அவள் மீது காதல்கொண்டான் . நீண்ட நாட்களாகத் தன் அன்புக்குரியவளைச் சந்திக்க முடியாத நிலை . திடீரென சந்திக்க ஒரு வாய்ப்புகிடைக்கிறது . தன் உள்ளம் கவர்ந்த அவளைக் காண அவள்வீட்டுக்கு  வேகமாகச் செல்லுகிறான். 
தன் காதல்உள்ளத்தை இன்று எப்படியும் அவளிடம் கூறிவிட வேண்டும் என்ற துடிப்புடன் சென்ற அவனுக்குப் பெரும்ஏமாற்றம் காத்திருக்கிறது . அங்கே வீட்டின் புறத்தே அவள் மட்டும் தனியே இல்லை . தாயும் இருக்கிறாள் .  முதலில் தடுமாறினும்  ,சூழலைப் புரிந்துகொண்டு சமாளிக்கிறான், "தாகமாக இருக்கிறது... கொஞ்சம் குடிக்கத் தண்ணீர்தாருங்கள்" என்று கேட்கின்றான். தாயும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் 
உள்ளே சென்றுவிடுகிறாள். அழகிய தங்கச் செம்பில் தண்ணீர் தருகிறாள் அந்தப் பெண். ஏன் தங்கச் செம்பில் தருவதாக கவிஞர் எழுத வேண்டும் ? ஒரு வேளை அவர்களின் செல்வச் செருக்கைக் காட்டுவதற்காக இருக்குமோ ?இவன் தண்ணீர் குடிக்கவா போனான் ? மெல்ல தண்ணீரைப் பெறுவது போல சட்டென்று அவளின் அழகியவளையல் அணிந்த கரத்தையும்பற்றிவிடுகிறான் . 
இதைச் சற்றும் எதிர்பார்க்க அவள் அதிர்ச்சியில் தன்னை மறந்து நிலையில், "அம்மா! இங்க வந்துபாரும்மா..இவன" என்று கத்திவிடுகிறாள் . உள்ளே இருந்து அம்மா அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவருகிறாள். 
சட்டென்று தன் நிலையை உணர்ந்த அவள், "தண்ணீர் குடிக்கும்போது அவருக்கு விக்கல்வந்துருச்சும்மா, அதுதான் உங்களைக் கூப்பிட்டேன்" என்று கூறி உண்மையை வேண்டுமென்றே மறைத்து பொய் சொல்லுகிறாள்.காதல் மின்சாரம் பாய்ந்தாலே பொய்கள் தானாக முளைத்துவிடுமோ ? ‘இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா?”என்று கேட்டுக்கொண்டே தாய் ; விக்கலைப் போக்க அவன் முதுகையும் தாய் பாசத்துடன் தடவிவிடுகிறாள். அந்தச்சமயத்தில் அவன் கடைக்கண்ணாலே அவளைப்ப் பார்த்துப் புன்னகை பூக்கின்றான். கண்ணும் கண்ணும் கொள்ளை அடிக்க காதல் அங்கே அரும்பியது .

இரண்டாயிரம் வருடமாக தமிழன் காதல் இப்படித்தான் இருக்கிறதோ ?

 காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு விநோதமான நெருப்பு
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது

- மிர்சா காலிப் எழுதிய கஜல் வரிகள் காலத்தை மீறி வாழ்கின்றன . வென்ற காதலாயினும் தோற்ற காதலாயினும் அது வீரியமிக்க பாடலாய் இனிக்கும். ஆயின் காதலைக் கொல்ல இங்கே சாதியும் , மதமும் , சாஸ்திரங்களும் அல்லவா வில்லனாகி நிற்கிறது .

இமயன் எழுதிய  ‘பெற்றவன்’ குறுநாவலை இப்போது படித்தால் தருமபுரி சாதியக் காதல் கொலையைப் பார்த்து எழுதியது என எண்ணம் தோன்றும் ; ஆனால் , அது தர்மபுரி சம்பவம் அரங்கேறும் முன் எழுதியது என்பதை அறிய நேரும் போது ஆச்சரியம் மட்டுமல்ல ; நம் சமூக அமைப்பின் மீது கோபமும் கொப்பளிக்கும் .

இந்த சாதியும் மதமும் சாஸ்திரங்களும் காதல் நெஞ்சைப் பிளக்கவும் காதலரை எரிக்கவும் உதவுமே தவிரக் காதல் நெஞ்சை அறிந்து சேர்த்து  வைக்குமா ? அன்றிலிருந்து இன்றுவரை இதுவே கேள்வி .குறுந்தொகை [ 156 ] பாடலில் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணார் கேட்கிறார் ; 

     பார்ப்பன மகளே ! பார்ப்பன மகளே !
செம் பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகளே !
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே”

அதாவது சிவந்த பூக்களையுடைய புரச மரத்தின்  பட்டைகளை நீக்கிவிட்டு அந்தத் தண்டில் உருவாக்கிய கமண்டலத்தையும் – அதில் விரத மிருப்பதற்கான சோற்றையும் வைத்திருக்கும் பார்ப்பன மகளே ! உன்னுடைய வேதம்.. அது எழுதப்படாத வேதம்...சும்மா கேள்வி வழி மனப்பாடம் செய்து ஒப்பிக்கின்ற வேதம் [ சமஸ்கிருதத்திலுள்ள வேதத்தை இதைவிட எப்படி கேலி செய்ய முடியும் ] அந்த பெட்டை நெட்டுரு வேதத்தால் காதலன் காதலியை சேர்த்து வைக்க முடியுமா ? சும்மா பேச வந்துட்டியே போம்மா !

அன்பு நெஞ்சங்களை இணைக்க உதவாத சாஸ்திரம் சம்பிரதாயம் சாதி சடங்குகள் அனைத்தையும் எள்ளி நகையாடி ; அவற்றைப் புறந்தள்ளி கரங்கோர்ப்பதே காதல் . அக்காதல் மானுட இயற்கை .நம் இலக்கியம் நெடுகிலும் காதல் உண்டு ; ஏனெனில் நன் சமூகம் நெடுகிலும் காதல் உண்டு .

ஒரு வங்கக் கவிதை சண்டிதாசர் எழுதியது எங்கோ படித்த ஞாபகம் :

“ பிரமெஞ்ச மெங்கும் ஒருவன்
விஸ்வரூபியாக நின்றாலும்,
காதலைப் பற்றி அறியவில்லை யென்றால்,
அவன் ஒன்றும் அறியாதவனே .
மண்ணின் மீது தண்ணீரும்
தண்ணீரின் மீது அலைகளும் ,
அலைகளின் மீது காதலும் ,
தேங்கி நிற்கின்றன .
காதல்..காதல்.. காதல் ..
இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு
பல அர்த்தங்கள் உண்டு .
ஆனால் , அதை வணங்கி
ஆழ ஆழத்தில் சென்றால்
ஒன்றே ஒன்று தெரியும்
அது..
முழுமையான அன்பே”

என்ன செய்வது இதனைப் புரியாமல் கொலைவாளை எடுக்கின்றனர் சாதிவெறியர்கள் !

1947ல் இந்தியா விடுதலை பெற்ற சூழலில் கவிஞர் தமிழ் ஒளி உணர்ச்சி கொந்தளிக்கும் பாக்களால் “ “வீராயி” என்றொரு காவியம் படைத்தார் . காதலைப் போல் அதுவும் சாகாவரம் பெற்றது . அக்காவியத்திலிருந்து – அதன் இறுதிப் பகுதியில் இருந்து சில காதல் போர்க்குணமிக்க வரிகளை இங்கே காதலர் தினத்துக்கு காணிக்கை யாக்குகிறேன் .


 “ எக்களிப்பு கொள்ளுதடா பறையோசை எங்கும்!
எதிர்நின்ற சாதிவெறி மதவெறிகள் எல்லாம்
சுக்காகப் போயிற்றுப் ! பறையோசை ஓடிச்
சுதந்திரத்தைச் சொல்லியுமே முழக்கதடா ஊரில் !

காதெல்லாம் கிழியும் வணம் பறையடித்து விட்டான்
‘ கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கல்யாணம்’ என்று!
தீதெல்லாம் கிழியும் வணம் ஆனந்தன் செய்தத்
திருமணத்தைப் பறையடித்துத் திக்கெட்டுஞ் சாற்றிச்

சூதெல்லாம் ஒழியும் வணம் சுழலுதடா ஓசை !
தொல்லைமிகத் தருகின்ற வைதீகம் செய்தத்
தோதெல்லாம் அழிந்துவிடத் துள்ளுதடா ஓசை !
சுற்றுதடா பறையோசைப் புரட்சியினைச் சொல்லி !”

என ஓங்கிப் பறையடித்தார் .. அதன் பின் அந்தக் காதலரை ஊரார் கொல்ல “குருதியிலே காதலர் குளித்தாரன்றோ! ..”  எனத் தொடங்கி ,  “ திருந்தா தமிழ் நாடே நீ செய்த தீமை / தீ , மண் , வெளி , நீர் , காற்று , வெளி உள்ளளவும் மக்கள் ஒரு போதும் மறவார்கள்..” என்றதோடு நில்லாமல்  “வானத்து விண்மீனை இருள் அழித்ததில்லை / மாக்கொடுமைத் தமிழ்ப் பண்புதனை அழித்தலுண்டோ?” என்பார் கவிஞர் தமிழ் ஒளி .

ஆம் தரிமபுரியில் வஞ்சகர் – சாதிவெறியர் ஆத்திரத்தோடு சாய்த்தாலும் சாயாத மாநெருப்பே காதல் ! அது மானுடம் உள்ளவரை வாழும் ! மானுடத்தை வாழவைக்கும் ! வாழ்க காதல் ! ஆம் .. ஆம் .. நீவீர் !காதல் செய்வீர் இளைஞர்களே ! தகரட்டும் சாதிவெறி !மதவெறி !அன்பு வெள்ளத்தில் நீந்தட்டும் மானுடம் !

நன்றி : இளைஞர் முழக்கம் பிப் 2015