ஒரு கவிதை கொஞ்சம் சுயபுராணம்...

Posted by அகத்தீ Labels:








ரு கவிதை
கொஞ்சம் சுயபுராணம்...
சு.பொ.அகத்தியலிங்கம்
 நான் எழுதிய கவிதை  தீக்கதிர் 1977 மேதின இதழில் வெளியானபோது  பெற்ற மகிழ்ச்சி இன்று  மீண்டும் அதனைப் பார்த்தபோது என்னுள் ஊற்றெடுத்தது.
பொன்விழாவையொட்டி தீக்கதிர் வெளியிட்டுவரும் காலப்பெட்டகத்துக்காக பழைய ஏடுகளை அன்றாடம் புரட்டும் மதுரைத் தோழர்கள் முருகனும் விஜயகுமாரும் அருள்கூர்ந்து இதனை தேடி எடுத்து எனக்கு மின்னஞ்சல் செய்தனர்.அவர்களுக்கு நன்றி.
அந்தக் கவிதை என் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் . ஒரு தொழிலாளியை முழுநேர கட்சி ஊழியனாக மாற்றிய திருப்புமுனையில் பிறந்ததல்லவா அது !
நினைவுகள் அலையடிக்கிறது .
கிண்டி சி.டி.ஐ யில் டூல் அண்ட் டைமேக்கர் படித்துவிட்டு - சில தொழிற்சாலைகளில் அத்துக்கூலியாய் பணியாற்றி - என் அரசியல் செயல்பாடுகள் காரணமாக வெளியேற்றப்பட்டு வெளியேற்றப்பட்டு -  பெஸ்ட் அண்ட் கிராம்டன் [ லிப்ட் பேக்டரி தண்டையார் பேட்டை]யில் தினக்கூலியாக பணியாற்றி வந்தேன். தினக்கூலி ரூ.10.
அங்கு தினக்கூலிகள் படும்வேதனையை கவிதையாக்கி தீக்கதிருக்கு அணுப்பினேன். மேதின இதழில் வெளியானது. கம்பெனி தொழிற்சங்கச் செயலாளர் கோபிநாத் அதை நோட்டீஸ்போர்டில் ஒட்டியதோடு தொழிலாளிகளிடம் சுற்றுக்கும்விட்டார். அவ்வளவுதான் மேனஜர் கொதித்தார் . என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று மற்ற தொழிலாளிகள் பேசத்தொடங்கிவிட்டனர்.
சில நாட்களுக்குப்பின் தொழிற்சங்கத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருபகுதி தினக்கூலிகள் நிரந்தரமாக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் என் பெயர் இல்லை. நான் சங்கச் செயலாளரைக் கேட்டேன் . “ நாங்கள் உன் பெயரைத்தான் சீனியாரிட்டி அடிப்படையில் பத்தாவதாக வைத்திருந்தோம். அந்த நாற்பது பெயரில் உன் பெயரை ஏற்க முடியாதென நிர்வாகம் உறுதியாக நின்றது. பேச்சுவார்த்தை முறியும் சூழலில் தலைவர் வி.பி.சி. அவனை விட்டுவிடுங்கள் , நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறி ஒப்பந்த்தத்தை இறுதியாக்கினார்.”
செயலாளர் இப்படிச் சொன்ன பின் மேனஜரிடம் சண்டை போடச் சென்றேன் அவர் சொன்னார் , “ நன்றாக கவிதை எழுது! கட்சி வேலை செய்! உனக்கு இங்கெதற்கு வேலை

எண்4 [இப்போது 16 ] ஸ்டிரிங்கர் தெரு அலுவலகத்தில் தோழர். வி.பி.சியைச் சந்தித்தேன். அவர் கூறினார், “ நாங்களெல்லாம் எந்தக் கம்பெனியில் வேலை செய்கிறோம். முதலாளி கொள்ளைக்கு உன் சக்தியை ஏன் விரயம் செய்கிறாய் ? பேசாமல் கட்சி முழுநேர ஊழியராகிவிடு. கட்சிக்கு நீ தேவை. நாங்கள் கட்சி செயற்குழுவில் ஏற்கெனவே பேசிவிட்டோம். அதனால்தான் உன் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்க சம்மதித்தேன் . அதன் மூலம் மற்றவர்கள் நிரந்தரமாக்கலும் எளிதானது.. உங்கள் அம்மா அப்பாவிடம் நான் பேசுகிறேன்.. நீ நாளையே மாவட்டச் செயலார் பி.ஆர்.பி யைப்பார்..
அந்த மணிக்குரலின் கட்டளை என்னைக் கட்டுப்படுத்தியது. .யோசிப்பதாகச் சொல்லி விடைபெற்றேன். வழியில் மின்சார ரயிலில் சந்தித்த கே.எம். ஹரிபட்டும் இதையே சொன்னார். உ.ரா. வரதராசன் அப்போது ரிசர்வ் வங்கி ஊழியர் , “ எனக்குக் கிடைக்காத வாய்ப்பு உனக்குக் கிடைத்துள்ளது மறுக்காதே என்றார். து. ஜான்கிராமனும் அப்படியே வழிமொழிந்தார். மறுநாள் தோழர் பி.ஆர். பரமேஸ்வரனை 81 வடக்குக் கடற்கரைச் சாலையில் செயல்பட்டுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலத்தில் சந்தித்தேன் . முழு நேர ஊழியர் ஆனேன்.
சு.பொ.அலி என்ற என் புனைப்பெயரிலேயே கவிதை வெளியாகி இருந்தது. பல்வேறு சிற்றேடுகளின் என் கவிதைக்ள் அப்போது வெளிவந்தன. எதையும் சேகரித்து வைக்கவில்லை. “ சு.பொ.அலி என்ற ஒரு வீரியமிக்க கவிஞர் சிற்றிதழ்களில் அவசரகாலத்தில் தென்பட்டார். நிறைய நம்பிக்கை இருந்தது. இப்போது அவரைக் காணவில்லை. அவர் உயிரோடு இல்லை என்று கருதுகிறேன்என்று ஒரு இலங்கை கவிதாவிமர்சகர் எண்பதுகளில் எழுதினார்.
 பிறகு வாலிபர் சங்கப் பணியில் முழுவதுமாக மூழ்கிவிட்டேன். எழுத்துப் பணி சற்றே தடை பட்டது. இளைஞர் முழக்கம் ஏட்டின் ஆசிரியராக பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியபோது என் எழுத்தாயுதம் அன்றைய தேவைக்கு ஏற்ப சுழன்றது.1993 ஆம் ஆண்டு தீக்கதிர் சென்னைப் பதிப்பு துவக்கப்பட்டது. அதில் பொறுப்பேற்றபோது என் எழுத்துப் பணி வேறு தளத்தில் விரிவடைந்தது. அதன் பின் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிவிட்டேன். விடுதலைத் தழும்புகள், மனித உரிமைகள் வரலாறும் அரசியலும் , சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள், பொதுவுடைமை வளர்த்த தமிழ், ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் , குடும்பத்தில் கூட்டாட்சி போன்ற என் நூல்கள் காலம் கடந்து நிற்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை.
கவிதை மீதான என் காதல் இன்னும் மீதமிருக்கிறது...
மீண்டும் 1977ல் வெளியான அக்கவிதைக்கு வருகிறேன்...அதன் உயிர்துடிப்பு இன்றைக்கும் மெய்தானே!!!
படியுங்கள்... உங்கள் கருத்தைப் பதியுங்கள்..........

 வாழ்க்கைப்  பாடலில் சில வரிகள்

சு. பொ. அலி
 
ரசியல் சட்டத்தில் தினக்கூலிகள் - நாங்கள்
அனுபவ நடப்பில் அபாய நோயாளிகள்
கனவில் வாழ்வதும் வாழ்வில் நைவதும்
வாடிக்கையான எங்கள் வாழ்க்கைப் பதிகம்

ஒருகவளம் சோற்றுக்காகவே
எங்கள் உழைப்பை! எங்கள் திறமையை!
சோரம் செய்கிறோம்...
சோரம் செய்தும் ஒரு கவளம் சோறும்
நிரந்தரமில்லை அழுது  சாகிறோம்

குறைந்த கூலியில் அதிக உழைப்பை
தந்திடும் மனித மாடுகள் எந்திர ஜீவன்கள்
இது தான் சமுதாய வீதியில் எங்கள் மதிப்பு

நேற்றைய மழையில் சரிந்த சுவரை
அப்புறப்படுத்த அவசரமாக தேவைப்படுவோன்
தினக்கூலியாவான்
சட்டம் எங்களை இப்படித்தான் நிர்ணயம் செய்கிறது.

குண்டுசி முதல் ஆர்யப்பட்டா வரை
ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்திடும்
நாங்கள் எப்படி தினக்கூலி யாவோம்?
உற்பத்தி என்பது அவசரத் தேவையா?
ஒரு நாள் கூற்றுக்கு வைத்திடும் மீசையா?
கேள்விகளை எல்லாம் கோஷங்களாக்கி
நாங்கள் முழங்கத் தொடங்குகிறோம்

சட்டமடாயலங்களில் எங்களுக்காக
நியாயத் தீர்ப்புகள் வாசிக்கப்படுகிறது
அமலாக்கப்படுவதில்லை
காகித சர்க்கரை கண்ணில் காட்டப்படுகிறது
சப்புக் கொட்டியே நாட்கள் நகர்கிறது

இருநூற்றி நாற்பது நாட்கள் உழைத்தால்
இதுவரை உழைத்ததின் பயனைக்காணலாம்
வேலை அங்கே நிரந்தரமாகும்
சலுகைகள் அனைத்தும் உடனே கிடைக்கும்

நீட்டி முழக்கி காகிதப் புலிகள்
கர்ஜனை செய்கிறது!
எங்களை கழுதைகளாக்கி
கழுத்தில் காரட்டை கட்டி ஒடவிடுகிறது!!

ஆண்டுகள் ஐந்தாய்
காரட்டை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கிறோம்
நாட்கள் என்னவோ?
இன்னும் இரு நூற்றி நாற்பது ஆகவே இல்லையாம்!
ஓய்வையும் இதுவரை உணரவே இல்லை
விந்தை இது தான்! எங்கள் வேதனை இது தான்!

வெளியே இருக்கும் வேலை இன்மையை சுட்டிக்காட்டி
நிரந்தர மின்றியே நியாயப்படுத்துவார்

எங்கள் கூடவே உழைப்பவர்
எங்கள் ரத்தம் பிழிபடும் போதும்
பார்த்து கண்ணீர் விடுகிற
எங்கள் சகாக்கள்
எங்களுக்காக போராடும்போது
காட்டிக்கொடுக்கும் கருங்காலிகளாக
நாங்கள் மாற்றப்படுவோம்

அடித்து உதைத்து
ஆசை வார்த்தைகள் ஆயிரம் காட்டி மிரட்டி
எங்கள் தலையில் நாங்களே
மண்ணை போடச் செய்வதில்
முதலாளிமார்கள் ரொம்ப சமத்தர்கள்

நியாயமான போர் குரல் ஒடுக்க
சகாக்கள் மீது வேலைப்பளு திணிக்க
லாபம் மேலும் உறிஞ்சி கொழுக்க
பயன்படும் நாங்கள்
கருவேப்பிலையாகவே எறியப்படுகிறோம்

தள்ளாதவயதில் விழுதுகள் தன்னை தாங்குமென்றே
நம்பிவளர்த்த எங்கள் தாய்கள்
இன்றோ
தள்ளதாத வயதிலும் தாய் விருட்சமே
இன்னும் விழுதை தாங்கி நிற்கும் சோகச்சித்திரம்
இது தான்
எங்கள் வாழ்க்கைச் சித்திரம்

சோக விதியை தூளாய் மாற்ற
சொந்தக்காவில் விருட்சமாய் வளர
ஆண்டுகள் பலவாய் முயன்றுபார்க்கிறோம்
ஆனகதை ஏதுமில்லை
எங்கள் படை எடுப்புகளெல்லாம்
தோல்வியில் முடிகிறது.

ஒவ்வொருமுறையும்
சோலை இதுவென எங்கோ நடந்தோம்
பாலைவனத்து சுடுமணல் நெருப்பில்
பாதம் வெந்ததும்! பாதைதெளிந்தோம்

ஒவ்வொருநாளும்
வேலை இன்று உண்டா? இல்லையா?
கேள்வியுடனே பொழுதுகள் விடிகிறது
இன்றைக்கு வேலையில் ! நாளைக்கு வீதியில்!
வள்ளுவர் பாஷையில் நெருதல் உள்னெருவன் இன்றில்லை
என்றபெருமை உடையவர்கள் நாங்கள்
நடமாடும் நடைபிணங்கள்

குறைந்த கூலியில்! அதிக உழைப்பை
தந்திடும் மனிதமாடுகள்? எந்திர ஜீவன்கள்
கனவிலே வாழ்வதும்! வாழ்விலே நைவதும்
வாடிக்கையான வாழ்க்கை பதிகம்
ஆகமொத்தம்
அரசியல் சட்டத்தில் தினக்கூலிகள்
அனுபவநெசப்பில் அபாய நோயாளிகள்
எங்கள் அபாயநோய்க்கு
காகித மருந்துகள் எதுவும்
கறுப்புக் கோட்டு டாக்டர் எவரும்
பயன்படமாட்டா! பயன்படமாட்டா!
வேதாந்த ஓத்தடம் வேண்டாம்! வேண்டாம்!

வேலைவாய்ப்பு அடிப்படை உரிமை
வேலை கொடுப்பது அரசின் கடமை

எங்கள் கோஷம் வானை கிழிக்க!
எங்கள் பயணம் இன்றே தொடங்கும்

இன்குலாப் ஜிந்தாபாத்

விசாரணைக் கூண்டில் கடவுள்

Posted by அகத்தீ Labels:

 
 
 
விசாரணைக் கூண்டில் கடவுள்

- சு.பொ. அகத்தியலிங்கம்



து கடவுள் குறித்த கதை அல்ல; வரலாறு. இப்படிச் சொல்வதால் கடவுள் என்பது மெய்யானது என்றாகிவிடுமோ?; இச்சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே கடவுளின் கதை என இந்நூலுக்கு பெயர் சூட்டினாரோ அருணன்.

இந்நூல் இன்றைய தேவை. ஆம். விஞ்ஞான ஒளி பரவப்பரவ மூடநம்பிக்கைகள் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட்டமெடுக்கும் என்கிற கருத்து இன்றைய யதார்த்தத்தோடு பொருந்தவில்லை. அறிவியல்  தகவல் ஞானம் பெரிதும் வளர்ந்திருக்கிறது. அறிவியல் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. வாழ்வின் ஒரு நொடிகூட அறிவியல் சாதனங்களின் துணையின்றி நகராது என்கிற உண்மையும்; அதே நேரத்தில் அறிவியல் சாதனங்கள் மூலமே மூடநம்பிக்கைகள் வலுவாக தூக்கிநிறுத்தப்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது.  உலகமயத்தின் பண்பாட்டு தத்துவ விளைவாய் மதவாதம் தலைதூக்கி ஆட்டம் போடுகிறது. இச்சூழலில் மதம், கடவுள் குறித்த விமர்சனங்கள் அறிவியல் பூர்வமாய் முன்னெடுத்துச் செல்லப்படுவது காலத்தின் கட்டாயம் . இந்நூல் அப்பணிக்கு பெரிதும் உதவும் என்பதால் முதலாவதாக இந்நூலை வரவேற்போம்.

ஆங்கிலத்தில் இது குறித்து ஆழமான நூல்கள் பல வந்துள்ள போதிலும் அவை தமிழ் வாசகர் பரப்பை இன்னும் போதுமான அளவு எட்டவில்லை. ஆகவே உலகெங்கும் மதம், கடவுள் தோற்றம் குறித்து நடக்கும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை விவாதங்களை உள்வாங்கி அத்தகைய நூல்களை தேடிப்படித்து சாறு பிழிந்து, மார்க்சிய சல்லடையில் வடிகட்டித் தருவது பெரும் சேவையாகும். அந்த வகையில் இந்நூல் பெரிதும் வரவேற்கத்தகுந்ததே.

கடவுளின்கதை யானது நம்பிக்கை நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலான மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையாலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள், அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுள் கொண்டு வரத்துடித்த தீவிரம், அதற்கு பல கடவுள் காரர்களே தெரிவித்த  கடும் எதிர்ப்பு , அப்படிக் கொண்டு வரப்பட்ட போது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தைக் கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகவும் பன்முகப்பட்டதாகவும் சுவையானதாகவும் இருந்தது. என்று நூலாசிரியர் அருணன்  முன்னுரையில் தந்துள்ள வாக்கு மூலம் நூல் நெடுக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று சில லட்சம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த கடவுள் - மத நம்பிக்கையின் ஆதிக்கூறு - அமானுஷ்ய நம்பிக்கை கருக்கொண்டு சமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தாம் இருக்கும் என்கிறார் நூலாசிரியர். மேலும் மரணம் குறித்த அறியாமையும் பயமும் ஆதிமனிதனிடம் தோற்றுவித்த அமானுஷ்ய நம்பிக்கை தொடங்கி அல்லா என்கிற ஏகக்கடவுள் சிந்தனை வரை கடவுள் கற்பிதம் வளர்ந்த பாதை நெடுக இரக்கமற்ற கொலைகளும் மோதல்களுமே வரலாற்றின் பக்கம் முழுக்க அடைத்துக் கொண்டிருப்பதை நூலாசிரியர் வலுவாக வரைந்து காட்டுகிறார்.

வேட்டை சமூகம் , விவசாய சமூகம் என ஒவ்வொரு சமூகத்திலும் உருவான வழிபாட்டு முறைகள் எப்படி அந்த சமூகத்தோடு தொடர்புடையதாக இருந்தது என்பதையும்; வெவ்வேறு நாடுகளில் தோன்றிய கடவுள்களும் மதங்களும் அவர்களில் புவியியல் சமூகவியல் சூழலோடு இணைந்தது என்பதையும் மிக நுட்பமாக குறித்துச் செல்கிறார். 
 
வெறுமே புராண ஆபாசங்களையோ கடவுள்கதைகளின் ஆபாசங்களையோ நம்பிக்கை யாளர்கள் மனம் நோகும் படி பிரச்சாரம் செய்வது பகுத்தறிவுப்  பிரச்சாரம் ஆகிவிடாது. ஒவ்வொன்றிற்கும் பின்னால் உள்ள சமூக வாழ்வியல் தேவைகளோடும் காலத்தின் பின்னணியோடும் இணைத்துப் பார்த்து பிரச்சாரம் செய்வது அவசியம். சிங்காரவேலர் அத்தகைய பிரச்சாரத்தை அன்றைக்குக் கிடைத்த அறிவியல் தகவல்களின் அடிப்படையில் கூர்மையாகச் செய்தார். பெரியாரைமறுத்து அல்ல அவரது சிந்தனைகளை சரியான திசைவழியில் மேம்படுத்தி சிங்காரவேலர் தொடங்கிய பணி பின்னர் உரியவர்களால் தொடராமல் விடுப்பட்டுவிட்டது. தற்போது புரட்சியில் பகுத்தறிவு என ப.கு. ராஜன் எழுதிய நூல் உட்பட பல நூல்கள். இடதுசாரி வட்டத்தில் இருந்து வெளிவரத்துவங்கி உள்ளன. இது நம்பிக்கை யூட்டும் நல்ல செய்தி. அதன் இன்னொரு அடிவைப்பே இந்நூல் எனில் மிகை ஆகாது.

இறந்தோர் வழிபாடு, தாய்தெய்வ வழிபாடு, லிங்க வழிபாடு, விக்ரக வழிபாடு, பல தெய்வ வழிபாடு, இப்படி வேர்விட்டு கிளைபரப்பிய கடவுள் கற்பிதத்தின் வரலாறு நம்மை வியக்க வைக்கிறது. சட்டென்று கடவுளை மனிதன் நம்பி விடவுமில்லை; ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எல்லாம் காலகதியில் எப்படி அரங்கேறியது? யார் அரங்கேற்றினர்? கேள்விகளுக்கு இந்நூலில் விடை உண்டு.

மோசே, இயேசு, முகமது நபி என தொடர்ந்துவந்த ஒவ்வொருவரும் சமூகத்தில் வழிபாட்டில் தங்கள் தாக்கத்தை ஆழமாகவேரூன்றினர். மோசே மலையில் இருக்கும் போது யோகாவா எனும் கடவுளின் கட்டளைகள் பெற்றார். இயேசு மலைப்பிரசங்கம் செய்தார். முகமது நபியும் மலையில் இருக்கும் போதே அசரீரிகேட்டார். இப்படி மலைக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? இந்நூலில் சொல்லிச் செல்கிறார். 
 
கடவுள் மனிதனைப் படைக்க வில்லை; மாறாக மனிதனே கடவுள் கற்பித்ததை சிருஷ்டித்தான் என்பதை ஆணித்தரமாய் இந்நூல் நிறுவுகிறது. அதுவும்  விதவிதமாக தன்தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்ப அவன்படைத்த கடவுள் எண்ணிக்கை அநேகம். அதில் செத்துப்போனவை பல. இன்னும் மீதமிருப்பவை பல. இவற்றையும் கொன்று ஏகமாக்க நடக்கும் தொடர்முயற்சிகள் எல்லாம் நம்மை வியக்கவைக்கின்றன.  விழிகளைத்திறக்கின்றன.

சமூகம் என்பது ஆயுதபலத்தால் மட்டுமல்லாது, புத்தி பலத்தாலும் உணர்வு பூர்வமான ஓப்புதல் பலத்தாலும் ஆளப்படுகிறது என்பதை ஆண்டான்கள் கிறுத்துவத்தின்  மூலம் பரிபூர்ணமாக உணரந்தார்கள் என ஐரோப்பிய அனுபவத்தை சொல்லும் போது சரி; பிராமணியம் வர்ணாசிரமத்தை காக்க தனது கற்பனைகளை ஆயுதங்களாக்கியதையும் மிகச்சரியாக வரைந்துள்ளார்.

யூதம், பௌத்தம், கிறுத்துவம், இஸ்லாம்,  இந்து என இன்று உலகில் நின்று நிலைக்கும் முக்கிய மதங்கள் தோன்றிய சூழல்; தன்னை தக்கவைத்துக் கொள்ள அவை மேற்கொண்ட சாகசங்கள்; ஆட்சியாளர்கள் தலையீடு என வரலாற்றுப் பார்வையோடு மதம், கடவுள் கற்பிதங்களின் தோற்றத்தை இந்நூலில் பதிவு செய்கிறார் அருணன்.

ஆண்டான் அடிமை யுகத்தில் நிகழ்ந்த செய்திகளே இந்நூலின் பிரதான சுருதி, ஆனால் நிலபிரபுத்துவகாலம், முதலாளித்துவ காலம், என தொடரும் இந்த கடவுள் மத நம்பிக்கை குறித்து அடுத்த பாகத்தில் அலசப்போவதாக நூலாசிரியர் வாக்குறுதி தந்துள்ளார். அதே சமயம் இதில் கூறப்பட்ட செய்திகளையே உரக்கச் சொல்ல வேண்டிய தேவையும் உள்ளது. 
 
வழக்கமாக நாத்திகம் பேசுவோர் மீது ஒரு அம்பு வீசப்படும். அதாவது நீங்கள் இந்து மதத்தையே தாக்குகிறீர்கள் கிறுத்துவம், குறித்தோ இஸ்லாம் குறித்தோ பேசப் பயப்படுகிறீர்கள் என்பது தான் அந்த குற்றச் சாட்டு.  இந்நூல் கிறுத்துவம், இஸ்லாம் அதற்கு முந்திய யூதம் இவற்றின் தோற்றம்,  மோதல்,  பலி என பலதை ஆதாரபூர்வமாகப் பேசுகிறது என்பது வெறும் செய்தி அல்ல பகுத்தறிவாளர்களுக்கு கிடைத்துள்ள கருத்தாயுதம் என்றே பொருள்.

ஒரு சின்ன செய்தி சுன்னத் என்கிற விருத்தசேதனம் பொதுவாக இஸ்லாமியர் உலகுக்கு கொண்டுவந்த நடைமுறை என்றே கருத்து பொதுபுத்தியில் உறைந்து போயுள்ளது. ஆனால் ஆது யூத மதத்திலிருந்தே பெறப்பட்டதாக நூலாசிரியர் வாதிட்டுச் செல்வது மிக முக்கியம். அதசமயம் புத்தமதத்திலும் இச்சடங்கு இருந்ததா? சீனாவில் சுன்னத் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் மத்தியலும் வலுவாக உள்ளதாகக் கூறப்படுகிறதே! அருணன் அடுத்த பதிப்பில் இதற்கான பதிலையும் இணைப்பார் என நம்புகிறேன்.

வெண்கலயுகம், இரும்பு யுகம் என ஆயுதங்களின் மாற்றங்களோடு கடவுள் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்நூலில் விரிவாக பதிவாகி உள்ளது.
சாக்ரட்டீஸ் துவங்கி இந்தியாவில் லோகாயாவாதிகள் நடத்திய பகுத்தறிவு போராட்டமும் கூடவே உள்ளது. இஸ்லாம் பிற மதநம்பிக்கையாளர்களை கூட நாத்திகர்களாகவே கருதுவதை; ஏன் கிட்டத்த அனைத்து மதங்களும் பிற மதங்களை மத நம்பிக்கையாளர்களை நாத்திகர்களை விட அதிகமாக வசைபாடுவதை விமர்சிப்பதை தாக்குவதை படிக்கிறபோது அன்பைப் போதிக்கவே மதங்களும் கடவுள்களும்உருவாயின என்ற கருத்து ஆட்டம் காண்கிறது.

தமிழகத்தில் நிலவிய ஆதி வழிபாட்டுக் கூறுகள்; நம்பிக்கைகள் திணைவழி சமூகத்தின் அம்சங்கள், வேல்வெறியாட்டு, கொற்றவை வழிபாடு, போன்றவைகள் உரியமுறையில் இந்நூலில் இடம் பெற்றிருந்தால் புரிதல் மேம்பட உதவி இருக்கும். தமிழர் தத்துவமரபு என இரு நூல் தொகுதிகள் எழுதிய அருணனுக்கு அது அறியாத செய்தி அல்ல. ஒரு அத்தியாயம் சேர்திருக்கலாமே? ஏன் தவறவிட்டார்? அடுத்த பதிப்பில் எதிர்பார்க்கிறோம்.

மதம் , கடவுள் தோற்றம் குறித்த செய்திகளை படிப்பது கதை படிப்பதோ வரலாறு படிப்பதோ அல்ல; மாறாக சமூகத்தின் பொது புத்தியில் ஊறியுள்ள கற்பிதங்களை அடையாளம் காணவும் அதன் பொருளற்ற நம்பிக்கைகளை அடித்து நொறுக்கவும் கருத்துப்போராட்டத்தின் ஒரு கூறு . அதாவது பகுத்தறிவை கூரேற்றும் முயற்சி அதற்கு இந்நூல் உதவும்.

இடதுசாரிகள் தாம் சரியான கோணத்தில் சமூகசீர்திருத்தத்தை இனி முன்னெடுத்துச் செல்லமுடியும். அதற்கு இந்நூல் குறித்த  விமர்சனங்களும் விவாதங்களும் உதவும் என்பதில் ஐயமில்லை. படியுங்கள் பரப்புங்கள். 
 
கடவுளின் கதை
ஆதிமனிதக் கடவுள் முதல் அல்லாவரை
ஆசிரியர்: அருணன்
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்   69/21, ஏ, அனுமார் கோயில் படித்துறை  சிம்மக்கல் , மதுரை 635 001 பக்: 360,    விலை: ரூ. 250/-

அறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்

Posted by அகத்தீ Labels:

 
 
 
 
அறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்  
 
சு.பொ.அகத்தியலிங்கம்.
 
 
     தமிழுக்கு    புதிதாக  வந்துள்ள   காத்திர        மான  வரவு  இந்நூல்.    A Short   History   of  Nearly  Everything      என்கிற ஆங்கில  நூலின் தமிழாக்கம்.கிட்டத் தட்ட அனைத்தின் சுருக்கமான வரலாறுஎன்பதே ஆங்கில நூலின் தலைப்பு. புரிதலுக்காகவும்  - தமிழ் வாசகர் பரப்பைச் சென்ற டைவதற்காகவும் - அனைத்தையும் குறித்த சுருக்க மான வரலாறு;மனித  அறிவுத் தேட லின் முழுக்கதை   என  விரிந்த தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன் . நன்று. 
 
ஆறு பாகங்கள் , 30 அத்தியாயங்கள் , 640 பக்கங்களில் பிரபஞ்சம் குறித்த -  பிரபஞ்சத்திலுள்ள அனைத்தை யும் குறித்த - உயிரினம் குறித்த  - மனிதன் குறித்த - சரியான  உண்மைகளைச் சென்றடைய அறிவியல் உலகம்  நடத்திய நெடிய வரலாற்றுப் பயணத்தின் கதையே இந்நூல்.    
 
அது மட்டுமா? இந்த நூல் உருவான வரலாறே வியப் பூட்டக்கூடியது. முதல் இரண்டு அத்தியாயங்களுக் காக 19000 கி..மீ .பயணம். 17 அகழ்வாராய்ச்சிப் பகுதிகளுக்கு நேரடி விஜயம் . மேலும் டார்வின் பற்றி எழுத காலோப்பாகஸ் தீவுகளுக்கு 178 நாள் பயணம். கடல் உயிரி பற்றி அறிய 176 அருங்காட்சியகங்களில் விவர சேகரிப்பு. 200 வாழும் விஞ்ஞானிகளுடன் நேர்முக உரையாடல் . இப்படி பெரும் தேடலும் உழைப்பும் தன்னகத்தே கொண்டது இந்நூல். இதற்காக அவர் படித்த புத்தகங்கள் திரட்டிய தரவுகள் என அனைத் தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
 
சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் , வாயு மற்றும் தூசியைக் கொண்ட ஒரு மாபெரும் சுழல், 2400கி.மீ குறுக்காக விசும்பில் நாம் இப்போது இருக் கிற இடத்தில் திரண்டு ஒருங்கிணைந்து புவியான செய்திமுதல் ; 440 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புவியி லிருந்து பிய்ந்து நிலா உருவான கதை என  பிரபஞ் சத்தில் தொலைந்து போனது  என்கிற முதல் பாகம் மீவெடிப்பு குறித்து பேசுகிறது . சுமார் 1450 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை அறிவியல் எப்படிக் கண்டடைந்தது என்பது மிகவும் ஆர்வமூட்டக்கூடி யது .
 
மண்ணியலும் வேதியலும் எப்போது அறிவிய லின் முன்னணிக்கு வந்தது; டைனசார் கண்டு பிடிக்க நடந்த பெரும் போராட்டம் எவ்வாறு நிகழ்ந்தது;  தோல்விகளும், ஏமாற்றங்களும், பலிகளும்,பழிவாங்கல்களும், அறிவியல் வரலாற்றிலும் ஊடாடி இருக்கிறது ; இவற்றை எல்லாம்  புவியின் அளவு என்கிற இரண்டாவது பாகம் நயம்பட உரைக் கிறது. ஆங்கிலம் தெரியா மல் ஸ்வீடன் மொழியில் எழுதியதால் ஷீலேவுக்கு அவர் ஆக்ஸிசனைக் கண்டுபிடித்த புகழ் கிடைக்க வில்லை. குளோரினை ஷீலேவே கண்டு பிடித்திருந்தாலும் 36 ஆண்டுகளுக்கு பிறகு கண்டு பிடித்த ஹம்ப்ரி டேவிக்கே அந்த பெருமை சேர்ந்தது என்கிற உண்மை நம்மைச் சுடுகிறது .
 
அறிவியல் மேதை நியூட்டன் உட்பட பல அறிவி யல் மேதைகளின் மறுபக்கம் இந்நூல் நெடுக நம்மி டம் சொல்லும் செய்திகள் பல . அறிவுத் தேடலும்  பல தவறான நம்பிக்கைகளும் சேர்ந்தே பயணித்திருக்கின்றன .தனிப்பட்ட பலவீனங்களை மீறி அறிவியல் உண்மை கள் வெளிச்சக் கீற்றுகளை பாய்ச்சியுள்ளன.
 
அணு, குவார்க் , புவிநகர்வு என இயற்பியல் கூறுகள் பலவற்றில் அறிவியல் வரலாற்றை  ஐன்ஸ்டீனில் தொடங்கிய அந்த புதிய சகாப்தத்தை மூன்றாம் பாகம் படம்பிடிக்கிறது. டால்டனின் அணுக் கொள்கை எவ்வாறு பிந்தைய கண்டுபிடிப்புகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது என்பது அறிவியல் கருத்து களும் ஒன்றையொன்று மோதி புதிய தடத்தில் முன் னேறுவதின் சாட்சியாகும்.
 
ஒரு நூற்றாண்டுக்கும் சற்றேகுறைந்தகாலம் வரை யிலும் புவியின் உள்ளே இருப்பது பற்றி, நன்கு விவரம் தெரிந்த வர்களுக்கும் கூட ஒரு நிலக் கரிச் சுரங்கப் பணியாளருக்குத் தெரிந்ததைவிட அதிகம் தெரிந்திருக்க வில்லை. என்று கூறுகிற நூலாசிரியர் எரிமலை உட் பட பல உட்கூறுகளை வியப்பூட்டும் விதத்தில் நமக்கு நான்காம் அத்தியாயம் நெடுக விளக்குகிறார். அறி வியல் வளர்ச்சி எல்லா துறை களிலும் ஏககாலத்தில் நடப் பதே. ஆனால் அளவீட்டில் கூடுதல் குறைவு இருக் கலாம். ஒவ்வொரு பாகமும் ஒருமையச் செய்தியைச் சொன்னாலும் பிற செய்திகளும் விரவியே இருக்கிறது.
 
புவியில்   130 கோடி கன கி. மீ தண்ணீர் உள்ளது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இதனை எட்டிவிட் டது. 1872 வரை கடல்கள் குறித்த முறையானமுதல் ஆய்வு உண்மையில் நிகழவில்லை . 240 விஞ்ஞானிகள் கொண்ட குழு 3 ஆண்டுகள் கடல் ஆய்வில் ஈடுபட்டது. எழு பதினாயிரம் கடல்மைல்கள் பயணம் செய்து; 4700 கடல் உயிரிகளைச் சேகரித்தனர். 19 ஆண்டுகள் உழைத்து 50 தொகுதிகளாக அறிக்கைகள் தொகுத்தனர். இந்தப் பணியில் ஈடுபட்டோரில் பலர் மன உலைச்சலுக்கு ஆளாகி நான் கில் ஒருவர் கடலில் குதித்தனர். இப் படி உயிர் கொடுத்து கண்டுபிடிக் கப்பட்ட அறிவியல் உண்மைகளின் வரலாறு ஐந்தாம் அத்தியாயத்தில் நம்மை சிலிர்க்க வைக்கிறது .
 
உங்களின் அப்பா, அம்மா அவர்களின் அப்பா அம்மா இப்படி முப்பது தலைமுறை பின்னால் பயணித் தால் உங்கள் உறவினர்கள் எண்ணிக்கை 1, 073,741,824 இவர்களின் வாழ்வை கூர்ந்து நோக்கினால் ஏதாவது ஒருவகையில் தகாத உறவாகவே இருக்கும் என அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போடுகிறார் நூலா சிரியர்.  நீங்கள் ஒரு பூங்காவில் இருக்கும் போது சுற்றி இருப்போரின் வரலாற்றைத் துருவினால் அனை வரும் உறவினரே. ஆசிரியரின் இக்கூற்றைச் சரியாக உள்வாங்கினால் சாதி மதச் சண்டை ஏன்? 
 
உங்கள் மெத்தையை உருப்பெருக்காடியால் உற்றுநோக்கின் 20 லட்சம் சிறுபூச்சிகளின் வீடாக இருப்பதைக் காணலாமாம். இப்படி அனைத்தையும் உற்றும் ஆழ்ந்தும் விரிந்தும் பார்த்து, இரா. நட ராசன் கூறுவ தைப்போல “அறிவியலின் வரலாறும் ;வரலாற்றின் அறிவியலும் தொடும்சிகரமாக” இந்நூலைப் படைத் திருக்கிறார்.
 
பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் நவீன தலை நிமிர்ந்த உடல் கொண்ட பிராணி ஆப்பிரிக் காவை விட்டு வெளியேறி பரவத் தொடங்கியது . 60000 ஆண்டுகளுக்கு முன்மனிதர்களிடையே மொழியே தோன்றியிருக்கவில்லை. நமது வரலாற்றை நாமறி வோமா?
 
 “திகைத்து நிற்கின்ற ஒரு குறுகிய காலத்தில் சிறந்த இந்நிலைமைக்கு வந்திருக்கிறோம் . நடத் தை யைக் கொண்டு நவீன மனிதர்களாகக் கருதப்படு வோர் , புவியின் வரலாற்றில் சுமார் 0.0001 சதவீதத் திற்கும் அதிக காலமாக இருக்கவில்லை “ என்கிறார் நூலாசிரியர். ஆனால் இந்த சொற்ப காலத்தில் அறிவி யல் பயணித்திருக்கும் தூரமும் காலமும் பரப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்நூல் அத னை நமக்குச் சொல்கிறது. பகுத்தறிவின் மீதான பற்று தலை நம்பிக்கையை பிரகடனம் செய்கிறது.
 
 மொழிபெயர்ப்பு குறித்து மொழிபெயர்ப்பாளர் நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். அது குறித்து தீர்ப்புச் சொல்ல நான் தேர்ந்த புலமையாளன் அல்லன். ஆனால் வாசகன் என்ற முறையில் மொழி பெயர்ப்பு எனக்குக் கடினமாகவேபடுகிறது . வழக்க மாக வேகமாக வாசிக்கும் பழக்கம் உடையவன் நான். என்னால் இந்நூலை அவ்வாறு வாசிக்க முடியவில்லை. பல இடங்களில் திருப்பிப் படிக்கும் தேவை ஏற்பட்டது. தமிழுக்கு வந்து சேர்ந்துள்ள இந்த அரியகொடையை அனைத்து வாசகர்களும் அட்டியின்றி பருக மொழியாக்கத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என் பது எனது தனிப்பட்ட கருத்து. எது எப்படி இருப் பினும் சமூகமாற்றத்திற்காக உழைக்க உறுதி பூண் டோர் அனைவரும் இந்நூலை ஒரு முறைக்கு இரு முறை - தேவைப்படின் இன்னொரு முறை என வாசித்து உள்வாங்கல் மிக அவசியம்.
 
அனத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
மனித அறிவுத்தேடலின் முழுக்கதை
ஆசிரியர்: பில் பிரைசன்,
தமிழில் : ப்ரவாஹன்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018.
பக் : 640 , விலை : ரூ. 640.