பொற்கொல்லர்கள் வாழ்வைப் புரட்டிப் போட்ட சூறாவழிகள்…

Posted by அகத்தீ Labels:

 



பொற்கொல்லர்கள்  வாழ்வைப் புரட்டிப் போட்ட சூறாவழிகள்…

 

டந்த அறுபது எழுபது ஆண்டுகளாக நகைத் தொழிலார்கள்  வாழ்வைப் புரட்டிப்போட்ட அரசின் தங்கக் கட்டுப்பாடு  கெடுபிடிச் சட்டம் , பொருளாதார நெருக்கடி , கோவை குண்டு வெடிப்பு ,கார்ப்பரேட் நுழைவு  என வரிசையாக  வீசிய சூறாவழிகளின் வரலாற்றுப் பதிவே ஜனநேசன் எழுதியுள்ள “ மின்னுவதெல்லாம்” நாவல். .

 

ஒரு தொழில் சார்ந்த சாதியின் சமூக வாழ்வில் வீசிய புயலின் தாக்கம் நாவல் நெடுக ஒரு புறம் விரிகிறது ; அதனை தங்கள் சாதிக்கு ஏற்பட்ட நெருக்கடியாக மட்டுமே பார்க்கும் விஸ்வகர்மாக்களின் சாதிய உளவியல் ,நவீன உற்பத்தி முறையால் தவிர்க்க முடியாமல் வாழ்வியலாகும் புதிய சூழல் எல்லாம் நாவலின் பேசு பொருள் .

 

ராஜகோபால் .ரவி ,ரத்தினம் என மூன்று தலைமுறைகளூடே நகைத்தொழிலும்  அவர்தம் வாழ்வும் சிந்தனையும் மாற்றம் அடைந்து வருவதினை கூர்ந்து நோக்கி காட்சிப் படுத்தி இருக்கிறார்.

 

என் குடும்பத்தின் என் பிள்ளைகள் ,சகோதரர் பிள்ளைகள் எல்லாம் காதல் திருமணம் கலப்புத் திருமணம் பண்ணிக்கொண்டதால் எங்கள் குடும்பத்தில் பல சாதி , மதம் கலந்துபோனது .அந்தவகையில் விஸ்வகர்மா உறவும் எமக்கு வாய்த்தது.  அப்படி வாய்த்த உறவினர் ஒருவர் குடும்ப நிகழ்வுக்கு போனபோது அவர் என்னிடம் நகைத் தொழிலில் மூன்று தலைமுறை ஏற்பட்ட சீரழிவு குறித்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். நான் பெரிதாக குறுக்கிட்டுப் பேசாமல் செவியை மட்டும் கடன் கொடுத்தது அப்போதுதான் .ஏன் எனில் எனக்கு எந்தவகையிலும் தெரியாத செய்திகளை அவர் சொன்னார் . ஆனால் என்ன ’நம்ம சாதி நம்ம சாதி’ என பொருத்தமில்லாமல் அவர் பேசியது கொஞ்சம் கஷ்டமாக இருப்பினும்  அவர் சொன்ன செய்திகளை  அறிய பொறுத்துக் கொண்டேன்.

 

இதனை இங்கு சுட்டக் காரணம் , இந்நாவலில் அவர் பேசியது கிட்டத்தட்ட அப்படியே  காட்சிகளாக  விவரிக்கப்பட்டு இருக் கிறது . ஒரு நகைத் தொழிலாளர் சங்க நிகழ்வுக்கு பேசப் போன போது அங்குள்ள தோழர்களிடம் குறிப்பாக மறைந்த தோழர் சுகுமாரனிடம்  கேட்டறிந்ததும்  நினைவுக்கு வந்தது. காஷ்மீரில் க்ளட்சர் குண்டு  [கொத்துக் குண்டு ]கோட்டு அழிப்பது போல்  பொற்கொல்லர்கள் வாழ்வில் க்ளட்சர் குண்டாக மிஷின் வந்துள்ளது” என  அங்கு பேசி கைதட்டல் வாங்கியதும்  நினைவுக்கு வருகிறது.

 

மொரார்ஜி தேசாய் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வந்ததும் 14 கேரட் தங்கம் என நடைமுறைப் படுத்த முயன்றதும் ; அதனால் பிய்த்து எறியப்பட்ட நகைத் தொழிலாளர் வாழ்வு - விஸ்வகர்மாக்கள் [பொற்கொல்லர்கள்]  வாழ்வு இன்னும் பெரும்பாலும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதும் இன்றைய தலைமுறைக்கு தெரியவே தெரியாது  . அதனை இந்நூல் நன்கு பதிவு செய்து நினைவூட்டியுள்ளது .

 

விஸ்வகர்மா சாதியில் பலர் தற்கொலை செய்து கொண்டனர் . நகைத்தொழிலைவிட்டு வெளியேறி படித்து  அரசு உத்தியோகம் வேறு தொழில்கள் என  பலர் சென்றுவிட்டனர் ,ஆயினும் சாதிய பாசத்தையும் சாதிய பண்பாட்டையும் விடமுடியாமலும்  திருமணம் குதிராமலும் ,காதல் திருமணத்தையும் ஏற்க முடியாமலும் படும் சிரமத்தையும் இந்நாவல் பேசுகிறது . சுருளியம்மா போல் சில பெண் பாத்திரங்கள் இருப்பினும் அவர்தம் கண்ணீரும் கஷ்டமும் போதுமான அளவில் இடம் பெறவில்லையே !

 

 

 “ தன் மகளுக்கு தாலி செஞ்சாலும் தட்டாசரிக செம்பு கலந்துதான் செய்வாங்காண்ணு ஊருக்குள்ளே ஒரு சொலவடை சொல்லுவாங்க..” என கிராமத்து நாட்டாமை சுப்பையா சொன்னதைக் கேட்டு ராஜகோபால் வெடித்து  சொக்கத் தங்கம் எப்படி பல்லால் கடித்தால் பல் பதியும் என்பதை செயல் முறையில் காட்டி , “மச்சான் ! சொக்கத் தங்கம் இப்படித்தான் இருக்கும் இதில் பத்துக்கு ஒண்ணு செம்பு கலந்தாத்தான் நகை செய்ய முடியும்” எனச் சொல்வது அறிய வேண்டிய செய்தி .

 

 “ புண்ணியவான் அத்வானி கோயம்பத்தூர் மண்ணுல காலெடுத்து வச்சாரு ஊரே மத கலவரத்தில் சிக்கியது …..பாரம்பரியமா ஆசாரிமாருகிட்டே அப்பனா மகனா பழகின துலுக்கமாரு பாபர் மசூதி இடிச்ச பிறகு இன்னிக்கு எதிரியா நிலைமை வந்திருச்சு .அயோத்தியில் விழுந்த இடி இங்கே எரிந்தும் எரியாமலும் புகைந்து கொண்டிருக்கு.” என சொல்லும் நாவலாசிரியர் கோவை கலவரத்துக்கு பின் நகைத்தொழில் எதிர்கொண்ட அழிவை சொல்லுகிறார் .தற்கொலை செய்து கொண்ட ,புலம் பெயர்ந்த ,தொழில் மாறிய ,துரத்தும் துயரத்தை சுருக்கமாக அழுத்தமாகச் சொல்லுகிறார் ஆசிரியர் .

 

நவீன இயந்திர நகை உற்பத்தியில் 22 காரட் அல்ல அதைவிட குறைவான தரத்திலேயே நகை செய்ய முடியும் என்பதை ,மெல்லிய நகைகளைவிட தடிதடியான எடைகூடடிய நகைகளில் செம்பே அதிகம் .இன்னும் சொல்லப் போனால் தங்கம் பொதிந்த செம்பு நகைகளே அவை என விளக்கமாகச் சொல்கிறது இந்நாவல் .

 

இங்கு வேலை செய்வோர் நிலை , “மாமோய் ,நான் என்ன கிராக்கி வேலையா செய்யறேன் ?செய்கூலி சேதாரம் கேட்டு வாங்க , இந்த பாக்டரியில் அவுங்களே மச்சம் சேர்த்து தங்கத்தை தகடாக கொடுத்திருவாங்க ! பத்தவைப்பு ,ஊதுறதுன்னு அய்ட்டத்தை முடிக்கிறவரை எல்லாம் மெஷின் வேலைதான் … எல்லாம் மெஷின்ங்கிறதாலே சேதாரம் போறது ரொம்பக் கம்மி .ஆனால் நம்ம கையில் செய்யுற ஃபினிஷிங் இல்லை . ஒரு இம்மி தங்கச் சன்னம் கூட எங்க சட்டையில ஒட்டியிறக்கூடாதுன்னு ,அவங்களே சட்டை பேண்ட் எல்லாம் கொடுத்திடுறாங்க ,தங்கத்தில ஒரு தூசு துணுக்குகூட ஒட்டாது !வெளியே வரும் போது அவுங்க டிரெஸ்ஸ அவுத்துக் கொடுத்திட்டு நாங்க போட்டுட்டு போன வேட்டி சட்டையோடு வருவோம்!” கடைசி வரிகளில்  துயரம் கொப்பளிக்கிறது.

 

இத்தொழில் ஆசாரிகள் மட்டுமே இருந்த நிலை மாறிடிச்சு , எல்லா சாதியும்  முஸ்லீம் உட்பட எல்லா மதமும் ,பெங்காலி உட்பட பிற மாநிலத்தவரும் ஈடுபடும் நிலையாகிப் போனது . சாதிக்கொரு தொழில் என்பது உடைபடுவது நல்லதே ஆயின் பாதிக்கபடுவோர் துயர் மீட்புக்கு அரசு செய்ததென்ன ? மோடி அரசின்  “விஸ்வகர்மா திட்டம்” நடைமுறை சாத்தியமற்ற டேக் அப் ஆகாத விமானம். ஆனால் அது இந்நாவலில் இடம் பெறவில்லை. ஒரு வேளை நாவல் எழுதப்பட்டது அதற்கு முன்பாக இருக்கக்கூடும்.

 

ஆந்திரமாநிலம் சித்தூரில் பிராமணர்களுக்கும் விஸ்வகர்மாக்களுக்கும் நடந்த வழக்கு விஸ்வகர்மாக்களுக்கு சாதகமாக முடிந்த செய்தி ஒரு பத்தியில் உள்ளது . இது முக்கிய நிகழ்வு . மநு தர்மத்திற்கு எதிரான வெற்றி .அ.மார்க்ஸ் இது குறித்து விரிவாக ஒரு நூல் எழுதி உள்ளார் . இதனை ஒரு அத்தியாயமாக விரிவாக இந்நூலில் சேர்த்திருக்கலாம் .

 

விடுதலைப் போரில் சென்னையில்  இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு பக்துருதீன் தயாப்ஜி தலைமையில் நடந்த போது மூக்கணாச்சாரி என்பவர் தமிழில் பேசி தேசிய அரசியலில் தாய்மொழியை முன்னிறுத்தியது அன்றைக்கு பெரும் பிரச்சனை ஆனது .அன்று அவர் பேசியது நகைத்தொழில் உட்பட சிறுதொழில் நசிவைப் பற்றித்தான். இதுபோன்ற வரலாற்று செய்திகளை , விடுதலைப் போரில் விஸ்வ கர்மா பங்கினை [ செ.திவான் சிறு நூலாகவே வெளியிட்டிருக்கிறார் ] ,தியாகராஜ பாகவதர் ,என் எஸ் கிருஷ்ணன் போன்ற கலை மேதைகள் இச்சமூகத்தில் மலர்ந்ததை போகிற போக்கில் சொல்லி இருக்கலாமோ !

 

கடைசி அத்தியாயம் ஆசிரியரின் எதிர்கால கனவு திட்டமாக உள்ளது . கனவு மெய்ப்படும் என நம்பிக்கையோடு நாவலை நிறைவு செய்கிறார் ஜனநேசன் . பொதுவாக  பொற்கொல்லர்கள் விஸ்வகர்மாக்கள் வாழ்வில்  நகைத் தொழிலில் கடந்த அற்பதாண்டுகளுக்கு மேலாக ஏற்பட்ட அழிவுகள் ,மாற்றங்களை நாவல் வடிவில் இந்நூலில்  புனைவாகச் சொல்லி இருக்கிறார் ஜனநேசன் . இந்த வாழ்வியல் வரலாறு இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள நிச்சயம் உதவும் .வாசிப்பீர் !

 

மின்னுவதெல்லாம் [ நாவல் ] ஆசிரியர் : ஜனநேசன் ,

வெளியீடு : நன்னூல் பதிப்பகம் , மணலி – 610203 ,திருத்துறைப் பூண்டி .

Email : nanoolpathippagam@gmail.com  பக்கங்கள் : 124 , விலை : ரூ.150/

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

29/04/2024.

 


முன்னேறிவிட்டோம் !

Posted by அகத்தீ Labels:

 


 

முன்னேறிவிட்டோம் !

 

 

சோள வயல்கள் வீடுகளாகிவிட்டன

ஏரி தண்ணீர் ரசாயணக் கழிவு நீராகிவிட்டது

பட்ட மரங்கள் எலும்பு தெரிய நிர்வாணமாய்

புறாக்கள் ,குருவிகள் ,நாரைகள் ,கழுகுகள் ,

எல்லாம் எங்கே போய்த் தொலைந்தன

குற்ற உணர்ச்சி ஏதும் இன்றி

வெயிலைச் சபித்துக் கொண்டிருந்தான்

AI செயற்கை அறிவை விரலால் தடவி

கண்களால் மேய்ந்து கொண்டிருந்தான்.

தொண்டை வறண்டு கொண்டிருந்தது

இன்னும் தண்ணீர் லாரி வந்து சேரவில்லை .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

25/4/2024.

 

 


அணையா பெரும் அடுப்பு

Posted by அகத்தீ Labels:




அணையா பெரும் அடுப்பு

 

 


வெப்ப அலை அணல் காற்று

வெறும் சொற்களாகவா இருக்கிறது ?

இல்லை.இல்லை.இல்லவே இல்லை.

பிரளயத்தின் முன்னறிவிப்பாக அல்லவா இருக்கிறது.

 

தோட்ட நகரம் பெங்களூரு

காங்கிரீட் காடாகிவிட்டது

தப்பிப் பிழைத்த மரங்கள்

மூச்சுவிடவும் காற்று இல்லை .

நீரைத் தேடித் தேடி நீண்ட வேர்கள்

சோர்ந்து வறண்டுவிட்டன .

 

பெங்களூரில் வீடுகளுக்கு

ஜன்னல் என்பதே அநாவசியம்

அப்படி ஒரு காலம் இருந்தது .

ஏசி குளிரூட்டி இல்லாமல்

குடியிருக்கவே முடியாதென்கிற

கொடுங்காலமும் வந்துவிட்டது .

 

ஓடும் வாகனங்களில் தண்ணீர் லாரியே

அதிக எண்ணிக்கை என்பது வெறும்

புள்ளிவிவரமல்ல ! பேரிடரின் குறியீடு !

காவிரித் தண்ணீர் குழாய்களில்

வெப்பக் காற்று மட்டுமே வருகிறது !

வேதனையின் உச்சமல்லவா இது ?

 

மரங்களை வெட்டும் போது

காடுகளை அழிக்கும் போது

நீர்நிலைகளை தூர்க்கும் போது

இலக்கின்றி அடுக்குமாடிகளை எழுப்பும் போது

யோசிக்கவும் இல்லை

எச்சரித்தோர் குரலுக்கு செவி சாய்க்கவும் இல்லை

இப்போது அழுது புலம்பி என்ன பயன் ?

 

பெங்களூர் மட்டுமா ?

வெற்றி எக்காளமிடும் ஒவ்வொரு நகரமும்

அணையா பெரும் அடுப்பு ஒன்றை

மறைத்து வைத்திருக்கிறது !

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை

விழித்துக் கொள்ள….

 

 


சு.பொ.அகத்தியலிங்கம் .

24/4/2024.


வாலிபர் சங்கத்தை அழுத்தமாக ஆவணப்படுத்தும் நாவல் …

Posted by அகத்தீ Labels:

 



ஏப்ரல் 23 : உலக புத்தக தினத்தை நோக்கி…

 

வாலிபர் சங்கத்தை அழுத்தமாக

ஆவணப்படுத்தும் நாவல் …

 

 

 “…. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் சாதியப் பெருமிதம் தலை தூக்கி வருவதும் ,சாதியின் பின்னால் உழைக்கும் மக்களை அணிதிரட்டலும் வேகமெடுக்கும் சூழலில் சக்தி சூர்யா ‘நரவேட்டை’ என்ற நாவலை முன் வைக்கிறார் . விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்தில் தொண்ணூறுகளில் கதை நடக்கிறது.” என்கிறார் அ.கரீம் முன்னுரையில் .

 

 “ ….. மற்றபடி ,எனது பால்ய காலம் தொட்டு ,என் உள்ளத்தில் உருண்டு கிடந்த சம்பவங்களைத்தான் ,புனைவு கொண்டு வரைந்துள்ளேன்.” என்கிறார் முன்னுரையில் சக்தி சூர்யா. அது உண்மையே !

 

முயல் வேட்டையில் தொடங்கி தொன்மக் கதையாடல்கள் , வாழ்நிலை ,காதல் என தொடர்ந்து மனித நரவேட்டையில் ஆணவக் கொலையாக முடிகிறது நாவல் . இடையில் ஊரில் நடக்கும் சாதிக் கலவரமும் , அதைத் தொடர்ந்து இடது சாரிகளின் காத்திரமான தலையீடும் , குறிப்பாக இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் முன்னெடுப்பும் மிக கவனமாக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது .

 

“ கஞ்சிக்கு கஷ்டம்னா கடவுளைக் கடிச்சு திங்க முடியுமா ?” எனக் கேட்கிற ஒகிலித் தாத்தா வழி தொன்மக் கதைகளும் வாழ்க்கைப் பாடுகளும் நூல் நெடுக விரிகிறது .

 

முயல் வேட்டையில் அறிமுகமாகும் முருகன் பள்ளிக்கூடம் படிக்கும் போதே இடது சாரி இயக்கங்கள் தொடர்பில் மெல்ல மெல்ல எழுந்து நிமிர்வது நாவலின் ஒரு முடிச்சு . கண்ணன் பொன்னி சாதிகடந்த காதலும் கல்யாணமும் ஆணவக் கொலையும் இன்னொரு முடிச்சு . இதில் கண்ணன் பொன்னி காதல் கூட வலியோடுதான் தயங்கி தயங்கித்தான் சொல்லப்படுகிறது . சாதி வெறி ஆணவக் கொலைக்கு தள்ளுவதை  நெஞ்சம் பதைக்கச் சொல்லுகிறார் சக்தி சூர்யா.

 

இவற்றுக்கிடையே   ஊரின் சில நிகழ்வுகள் மூலம் கிராமத்தில் இறுகிப்போயிருக்கும் சாதிய முரண்கள் , தற்கொலையாகிப் போகும் கொலைகள் ,ஆணாதிக்கக் கொலைகள் , மூடத்தனங்கள் ,கிராமிய பெண் தெய்வங்களின் கதைகள்  என தான் வாழ்ந்த ஊரின் செய்திகளை அள்ளிக்கொட்டுகிறார் சக்தி சூர்யா . முதல் நாவல் என்பதால் அனைத்தையும் சொல்லிவிட எண்ணுவது இயல்புதானே !

 

இந்நாவலில் ஓர் அத்தியாயத்தில் கமுதி விலக்கருகே முத்துமாரியம்மன் கோயிலில் ஓர் அதிசம் நடப்பதாக வருகிறது . “…….. வெள்ளாமைகூடச் செய்ய முடியாமல் கண்ணுக்கெட்டிய தூரம் தரிசாகக் கிடக்கும் செவல் காட்டில் கைமண் தோண்டினால் தண்ணீர் வருகிறது அந்தத் தண்ணீரும் இனிக்கிறது..” என்ற செய்தி நம்ப முடியாமல் சிரமப்பட்டாலும் கூடிய ஜனம் நேரில் பார்த்து முத்துமாரியின் சித்து விளையாட்டு  என்று கொண்டாடுகிறது .அந்தக் காடே பரப்பாகி கடை ,கண்ணி என விழாக்கோலம் பூண்டு விடுகிறது .

 

சில அத்தியாயங்களுக்குப் பின் இந்த புதிர் அவிழ்க்கப்படுகிறது , ஆராய்ச்சியாளர்கள் அது கடலைப் பாறை என்பதால் மேல்மட்டத்தில் தேங்கிய நீர்தான் எனச் சொல்கின்றனர் .விரைவில் அதுவும் வற்றிவிடுகிறது .ஊரும் கோயிலும் களை இழந்து விடுகிறது என்பதை சொல்லிச் செல்கிறார் நாவலாசிரியர் .ஆனால் அத்தோடு நிற்காமல் ஒகிலித் தாத்தா மூலம் சொல்கிறார் ,”…சில சாமிகளுக்கும் ஆயுசு கொஞ்ச காலம்தான் போலிருக்கு.” இதுதான் கிராமத்து உளவியல் .

 

அத்தியாயங்களின் தலைப்பை இலக்கியங்களில் இருந்து எடுத்த நயம் மிக்க வரிகள் அலங்கரிக்கின்றன . இதனை ரசிப்போரும் இருப்பர் ,முரணென ஒதுக்குவோரும் இருப்பர் .

 

“எத்தனை நூற்றாண்டுகள் இந்த சாதி இழிவை சுமக்கிறது ? நமது முன்னோர்கள் நேர்த்திக் கடனுக்கு வேண்டி இருக்க மாட்டார்களா ? இந்த துடியான சாமிகள் நினைத்திருந்தால் பெரிய சாதிக்காரர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து இருக்காதா ?”

 

இப்படி ஆங்காங்கு சிந்தனை பொறிகள் இந்நாவலின் நல்ல கூறு .

 

 “தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதியினரால் உண்டாக்கப்பட்ட கலவரத்தில் ,இடதுசாரி இயக்கத்தின் வாலிபர் சங்கம் எவ்விதம் களம் இறங்கி அமைதிக்கு வழி வகுத்தது என்பதை இதுவரை யாரும் இவ்வளவு அழுத்தமாக ஆவணப்படுத்தியது இல்லை.” என்கிற புலியூர் முருகேசன் வாக்குமூலம் மெய்யே .அதுவே இந்நாவலின் சிறப்பு .

 

நாவலை வாங்கி வாசியுங்கள் !

 

நரவேட்டை , [ புதினம்]  ஆசிரியர் : சக்தி சூர்யா ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail : bharathiputhakalayam@gmail.com  / www.thamizhbooks.com

பக்கங்கள் : 280  , விலை : ரூ.280 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

22/4/2024.

 

 

 

 

 


மிருதங்கத்தின் வலியும் ரணமும் ………….

Posted by அகத்தீ Labels:

 





ஏப்ரல் 23 : உலக புத்தக தினத்தை நோக்கி,

 

மிருதங்கத்தின் வலியும் ரணமும் ………….

 

 

மிருதங்கத்தில் மாட்டுத் தோல் குறிப்பாக பசுத்தோல் பயன்படுத்தப் படுகிறது எனினும் பார்ப்பனர்கள் இதனை இசைக்கத் தயங்குவதில்லை .பிற தோல் கருவிகள் மீது காட்டும் ஒவ்வாமை இதன் மீது இல்லை . ஏன் ?இதன் சமூக வரலாற்றை அறிய வாசலைத் திறக்கிறது டி.எம் .கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் :செபாஸ்டியன் குடும்பக் கலை” எனும் நூல்

 

“மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு
மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம் ஹே ஹே ஹே ஹே..”

 

2001ல் வெளிவந்த விக்ரம் நடித்த “காசி” திரைப்படத்தில்  இளையராஜா இசையில் புலமைப்பித்தன் பாடலைக் கேட்டு ரசித்தோம்  ;  அப்போது மாட்டுத் தோலா ? மான் தோலா என விவாதம் நடந்ததும் என் நினைவிலாடுகிறது .

 

சென்ஸாருக்குத் தப்பவும் ,மதவெறியர் மிரட்டல் வருமென பயந்தும் மாட்டுத் தோலை  மான் தோலென மாற்றிப் பாடியதாக இருக்கக்கூடும் என அன்றைக்கு சமாதனம் செய்து கொண்டோம். [ உண்மையும் அதுதான் என உள்வட்டாரத்தவர் சொன்னார்கள் ]

 

பாட்டை கேட்பதைத் தவிர இசைஞானம்  எதுவும் எனக்குக் கிடையாது .ஆகவே டி.எம் .கிருஷ்ணா நூல் வந்தபோது  சூட்டோடு படிக்க தோன்றவில்லை .தற்சமயம்  டி.எம் .கிருஷ்ணாவுக்கு எதிராக சனாதன சிறு கும்பல்  ஒன்று கச்சை கட்டி கனைத்தபோது இந்நூல் மீது ஆர்வம் பிறந்தது . ஏன் எனில் கர்நாடக சங்கீதத்தை குறிப்பிட்ட சாதியின் பிடியிலிருந்து விடுவிக்கப் போராடும் டி.எம். கிருஷ்ணாவின் ஜனநாயகப் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை அல்லவா ? இந்த நேரத்தில் என் சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்லி விடுகிறேன்.

 

 “சங்கராபரணம்” எனும் திரைப்படம் வந்த பொழுது நடந்த ஓர் நிகழ்வு இங்கு நினைவுக்கு வருகிறது . நான் அப்போது ஒரு சினிமா விடாது பார்க்கும் டைப் . தோழர் சின்னையாவும் நானும் படம் பார்க்க கிளம்பிவிடுவோம். அதே போல் அப்படத்தையும் பார்த்துவிட்டோம் . மறுநாள் தீக்கதிரில் வந்த விமர்சனத்தைப்  படித்ததும் கடுப்பாகி நானும் சின்னையாவும் பேசிக்கொண்டிருந்தோம் .அப்போது பெரம்பூர் கட்சி அலுவலகத்தில்தான் சிபிஎம் மாநிலக்குழுவும் தற்காலிகமாக இயங்கி வந்தது .எங்கள் பேச்சினூடே தோழர் ஆர். ராமராஜ்  வந்தார் . நாங்கள் சொல்வதைக் கேட்டார் . அங்கே வந்த மாநிலச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியத்தை அழைத்து விஷயத்தைச் சொல்லி கோர்த்துவிட்டார் தோழர் ஆர் .ராமராஜ்.

 

 

 

உடனே ஏபி சொன்னார் , “ இண்ணைக்கு இரவுக் காட்சியில் அந்தப்படத்தை நாம் நாலுபேரும் பார்க்கிறோம் . சின்னையா !  டிக்கெட் புக் பண்ணு !” எனச் சொல்லி காசை எடுத்துக் கொடுத்தார் .இரவு படம் பார்த்தோம்.

 

 

 மறுநாள் சொன்னார் , “ ஒடுக்கப்பட்ட ஓர் சாதியில் பிறந்த ஒரு சிறுவன் கர்நாடக இசையில் மேலெழுந்து வருவது ஓர் பாராட்ட வேண்டிய ஜனநாயகச் செய்தியே ! சினிமா மசாலாவில் நாம் எதிர்பார்க்கிற எல்லாமுமா கிடைக்கும் ? உங்க விமர்சனம் சரியே !” என்றவர் தீக்கதிருக்கு போண் செய்து பேசி இரண்டொரு நாளில் இன்னொரு தோழர் [ எஸ் பி  என நினைவு ] எழுதிய விமர்சனம் வரச் செய்தார் . சாதியத்தை எதிர்க்கிற அல்லது மீறுகிற எதுவாயினும் ஆதரிக்க வேண்டும் என்பதில் தோழர் .பாலசுப்பிரமணியம் உறுதியாக இருந்தார் . அது தெளிவான வழிகாட்டல் அல்லவா ?

 

இந்த நிகழ்வை அசைபோடக் காரணம் டி.எம்.கிருஷ்ணாவின் முயற்சியில் விமர்சனங்கள்  இருக்கக்கூடும் ,ஆயினும் நோக்கம் ஜனநாயகத் தன்மை கொண்டது அல்லவா ?அவருக்கு தோள் கொடுப்போம். அதன் ஒரு பகுதியே இந்நூலைப் படிக்க என்னைத் தூண்டியது. நீங்களும் வாசியுங்கள்.

 

 

மிருதங்கமும் மத்தளமும் ஒன்றா வெவ்வேறா ? நானறியேன்.ஆயினும் ஒன்று என்றே நான் கருதுகிறேன் . கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் மிருதங்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவமான இடம் உண்டு . இன்னும் சொல்லப் போனால் கர்நாடக சங்கீதத்தையும் மிருதங்கத்தையும் பிரித்துப் பார்க்கவே இயலாது . அப்படிப்பட்ட மிருதங்கத்தின் உருவாக்கத்தில்  சிந்திய வியர்வையை ஒருவர் ஆவணப்படுத்துவது என்பதே மிகப்பெரிய விஷயம் .

 

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் உழைத்து அலைந்து திரிந்து விவரங்களை அக்கறையோடு சேகரித்து , அவர்களோடு இரண்டறக் கலந்து உயிர் நாடியை கிரகித்து இந்நூலை எழுதி இருக்கிறார் டி.எம் .கிருஷ்ணா . சாதியத்தின் கோரக் கரங்கள் எப்படி எல்லாம் இயக்கி இருக்கின்றன என்பதை தன்னால் இயன்றவரை உள்வாங்கி சொல்ல முயன்றிருக்கிறார் .

 

“ மிருதங்கம் பற்றிய இந்நூல் ,சமூக அரசியல் , அழகியல் , வேதியல் , உயிரியல் , ஒலியியல் ,பொறியியல் , இயற்பியல் ஆகியவற்றை உள்ளடக்கியது.” என நன்றி சொல்லும் போது டி.எம்.கிருஷ்ணா சொல்வது மிகை அல்ல.

 

மிருதங்கம் ஆட்டுத் தோல் ,எருமைத் தோல் ,பசுத்தோல் ஆகிய மூன்றும் சேர்த்து செய்யப்படுவதை ,அதன் பின்னால் உள்ள சாதிய தீண்டாமையை இந்நூல் உரக்கவே பேசுகிறது . மிருதங்க வித்துவான்கள் பெரும்பாலும் பார்ப்பனராக இருக்கும் போது [விதி விலக்குகளும் உண்டு] , இந்த மிருதங்கத்தை உருவாக்கும் கைவினைஞர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருப்பது தற்செயலானதா ? இதன் வரலாற்று வேர் எது ? இந்நூல் தேடுகிறது .

 

மிருதங்க உருவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ,மேம்படுத்தல்கள் இவற்றின் பின்னால் மிருதங்க உலகில் புகழ்கொடி நாட்டிய மணி ஐயரே இருந்ததாகச் சொல்லப்படும் கூற்றை நூலாசிரியர் மறுக்கிறார் . மிருதங்க உற்பத்தியில் ஈடுபட்ட  கைவினைஞர்கள் ,பணியாளர்கள்  பங்களிப்பை எப்படி நிராகரிக்க முடியும் என டி எம் கிருஷ்ணா கோபப்படுகிறார் . அதனையொட்டி மணி ஐயர் குறித்த ஓர் விமர்சனத்தை முன் வைக்கிறார் , “மிருதங்கத்த்தின் வடிவமைப்பிலும் தன்மையிலும் ஏற்பட்ட வளர்சிக்கான பெருமையையும் வரித்துக் கொள்ளும் ஆணவம் இதில் தெரிகிறது.இந்த ஆணவத்தை மீறி புனித முகம் காட்டவும் அவரால் முடிகிறது .”

 

தஞ்சாவூர் பாணி ,சென்னை பாணி ,ஆந்திர பாணி ,கர்நாடக பாணி  என வெவ்வேறு மிருதங்க உற்பத்தி மையங்கள் உருவான பின்னணி ,அதில் சம்மந்தப்பட்ட குடும்பங்கள் , சாதியத்தின் பங்கு , வாழ்க்கை முறை ,மிருதங்கம் உருவாக தேவைப்படும் கூட்டு உழைப்பு ,அதில் தோல் தொழிலாளர் ,ஆசாரி , மிருதங்கம் செய்யும் கைவினைஞர்கள்  எனஒவ்வொருவரின் வரையறுக்கப்பட்ட இடம் , நவீன உலகில் ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்கள் என எல்லாவற்றையும் ஆவணபடுத்தும் முயற்சியே இந்நூல் .

 

இந்நூல் ஒவ்வொரு கட்டத்திலுமான தொழில் நுட்பக் கூறுகளையும் அதற்கு தேவைப்படும் கைவினைஞர்களின் உழைப்பையும் அனுபவத்தையும் மிக காத்திரமாகப் படம் பிடிக்கிறது .அது குறித்து விரிவாகப் பேச எனக்கு ஞானம் போதாது . ஆகவே இங்கு பேசவில்லை .வாசகர்கள் படித்து உள்வாங்க அன்புடன் வேண்டுகிறேன்

 

மிருதங்க வித்துவான்களுக்கும் மிருதங்கம் செய்யும்  கைவினைஞர்களுக்கும் இடையிலான உறவின் தன்மை மிகவும் சிக்கலானது . பெரும்பாலும் உயர் சாதியினரான வித்துவான்கள் பெரும்பாலும் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மிருதங்க கைவினைஞர்களோடு நெருக்கமாக இணைந்து தம் தேவையை பெற வேண்டிய சூழலில் ஏற்படும் சமூக முரண்கள் இந்நுல் நெடுக ஊடும் பாவுமாய் வந்துள்ளது .

 

“மேல் நிலையில் இருப்பவர்கள் கீழே இருப்பவர்களை பெருந்தன்மையோடு நடத்தும் போக்கு சமூகத்தின் அதிகார அடுக்குகளை மறு உற்பத்தி செய்கிறது “ எனவும் , “ இந்த பாசாங்கில் எல்லோரும் பங்கு கொண்டனர்” என்றும் சொல்லிச் செல்கிறார் டி.எம் .கிருஷ்ணா . இது நுட்பமான அவதானிப்பு .இப்படி நிறைய தருணங்களில் இந்நூலில் டி.எம்.கிருஷ்ணா பேசியுள்ளார் .

 

11 அத்தியாயங்களின்  தலைப்பைப் பாருங்கள் ! எவ்வளவு நுட்பமாக ஆழமாக இந்நூலில் டி.எம் .கிருஷ்ணா பயணித்திருக்கிறார் என புலனாகும். 1] தஞ்சாவூரில் வேர் கொண்ட மரபு , 2. சென்னை நோக்கி ,3.சென்னை மிருதங்கச் சிற்பிகள் , 4.உருவம் தந்த மரச் சிற்பிகள் ,5. தோலின் ஆழம் , 6. தோலில் பிறக்கும் தாளம் ,7.சுண்ணாம்பும் கல்லும் , 8.குச்சி-கம்பி : மாபெரும் விவாதம் ,9.தமிழகத்திற்கு அப்பால் , 10. பெண்களின் பங்களிப்பு , 11. மிருதங்கச் சக்கரவர்த்தி .

 

ஒரு மிருதங்கத்தின் பின்னால் இவ்வளவு உழைப்பா ? இவ்வளவு வலியா ?

 

தோல் தொழில் இழிவானதாக  மநு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது .இத்தொழில் ஈடுபடுபவர்கள்  தீண்டத்தகாதவர்களாக மநு வரையறுத்திருக்கிறது .பறை ,தவில் உட்பட எல்லா தோல் கருவிகளும் ஆலயங்களில் வெகு தொலைவில் நிறுத்தப்படும் போது பசுத்தோலால் செய்தாலும் மிருதங்கம் நெருங்க முடிகிறதே எப்படி ?

 

ஒரு முறை தோழர் டி.கே.ரங்கராஜன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் , “ மிருதங்க கலையில் பல பிராமணர்கள் ஜொலிக்கிறார்கள் ,ஆனால் தவில் இசைப்பதில் எந்த பிராமணனாவது ஈடுபட்டிருக்கிறானா ? ஏன் ஈடுபடுவதில்லை ?” இக்கேள்வியும் விசாரிக்கப்பட வேண்டியதே . இப்படி எண்ணற்ற கேள்விகளை இந்நுல் என்னுள் எழுப்புகிறது .

 

மாதம்மாள் ,அஸ்வத்தம்மாள் போன்ற சில பெண்கள் சமூக எதிர்ப்பையும் மீறி மிருதங்க கைவினைஞர்களாக மாறிய கதை ஒரு காத்திரமான பதிவு . மிருதங்கம் செய்யும் கைவினைஞர்களின் மனைவிமார்களே இடையீடுகள் ,கிசுகிசுக்கள் மூலம் பல சமூக அவலங்களை வெளிப்படுத்துகின்றனர் என்கிறார் டி .எம்.கிருஷ்ணா ஓரிடத்தில் .

 

இன்னொரு இடத்தில் சொல்கிறார் ,” ‘சர்வம் தாள மயம்’ என்னும் தமிழ்த் திரைப்படத்தின் கதை இதுதான் .மிருதங்கம் செய்பவரின் மகன் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொள்வதில் உள்ள சவால்களை இந்தப் படம் பேசுகிறது .கலைஞருக்கும் கைவினைஞருக்கும் இடையிலான உறவு ,சமூக நுட்பங்கள் ஆகியவற்றை ஆழமாகக் கையாள இந்தப் படம் தவறிவிட்டது .இருண்ட பகுதிக்குள் பயணிக்கவும் சொல்லப்படாத வார்த்தைகளைக் கேட்பதற்கும் படம் தயாராக இல்லை . சாதியை அது காங்கிரீட் சுவர் போல் அது சித்தரித்தது .ஆனால் உண்மையில் சாதி கொல்லைப்புற கதவுபோல் செயல்படுகிறது.” டி.எம்.கிருஷ்ணாவின் நுட்பமான இந்த அவதானிப்பை இந்நூல் முழுக்கக் காண முடிகிறது .

 

“ஒரு பக்கம் உயர் சாதியினரின் கலை வெளிப்பாடும் கற்கும் சூழலும் ,மறுபக்கம் விளிம்பு நிலையில் உள்ள மிருதங்கக் கைவினைஞர்கள் என்று இரு மாறுபட்ட உலகங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எனக்கு உறைத்தது . இந்த இரு உலகங்களும் நடைமுறை வசதிகளுக்காக மட்டுமே சந்தித்துக் கொள்கின்றன. சாதி என்பது தொழில் அடிப்படையிலான அல்லது அவரவர் திறமை அடிப்படையிலான சமூக ஏற்பாடு என்றும் , பிறப்பின் அடிப்படையிலான சமூக ஏற்பாடு அல்ல என்றும் பிராமணர்கள்  தரப்பில்  ஒரு பொய் தொடர்ந்து சொல்லப்படுகிறது . கலைஞர்கள் கைவினைஞர்கள் இடையே இருக்கும் ஊடாட்டமும் இடைவெளிகளும் இந்தப் பொய்யை மறு உற்பத்தி செய்கின்றன .இதன் விளைவாகப் பண்பாட்டு ரீதியாகப் ‘பிறர்’ என்னும் பிரிவு உருவாகிறது .” இப்படி வாக்குமூலம் தருகிற டி. எம்.கிருஷ்ணாவும் பிறப்பால் ஒரு பிராமணரே .ஆயினும் உள்ளிருந்து வரும் இக்கலக்குரல் நன்று. தேவையானது .

 

நூலைத் தமிழில் தந்த  அரவிந்தனுக்கும் வாழ்த்துகள் .

 

இந்நூலை எல்லோரும் வாசிப்பீர் !

சனாதன எதிர்ப்பை முறியடிக்க

டி.எம்.கிருஷ்ணாவின் பக்கம் துணை நிற்பீர் !

 

 

மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் :செபாஸ்டியன் குடும்பக் கலை

ஆசிரியர் : டி.எம்.கிருஷ்ணா , தமிழில் : அரவிந்தன்,

வெளியீடு : காலச்சுவடு பப்பிளிகேஷன்ஸ் [பி]லிட்., 669 ,கே.பி.சாலை , நாகர்கோவில் 629001. E mail : publications@kalachuvadu.com  / 91-4652 /278525 .

பக்கங்கள் : 328 , விலை : ரூ.195/

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

21/4/2024.

 

 

 

 

 

 

 

 


சும்மா…. சிரிக்க மட்டுமே !

Posted by அகத்தீ Labels:

 





சும்மா…. சிரிக்க மட்டுமே !

 

என் பெயர் வடை

இட்லிக்கு முன் பிறந்தவன்

சந்தேகம் இருந்தால்

மருத்துவர் கு. சிவராமனைக் கேளுங்கள்

 

டீ ,காபி, இட்லி, பொங்கல்,

கேசரி, உப்புமா, தோசை

இப்படி என் சிநேகிதர்கள் அதிகம்.

என்னை வெறுப்போர் குறைவு

 

ஆமவடை ,உழுந்த வடை ,பருப்பு வடை

மெதுவடை ,மசால்வடை ,தவலைவடை ,

கீரைவடை , தட்டுவடை, அனுமார் வடை

தயிர்வடை ,ரசவடை ,சாம்பார்வடை

எத்தனை பெரிய குடும்பம் எனக்கு

எல்லா மதத்தவரும் சாதியினரும்

என் ஆசை உறவுகளே!

 

 

நான் எண்ணை குடித்தால்

தந்தி பேப்பரில்  பிழிந்து

தின்று விடுவார்கள் ஒரு போதும்

குப்பையில் போடமாட்டார்கள் !

 

ஒருத்தர் தினசரி

மாவும் எண்ணையும்

அடுப்பும் இல்லாமலே

வாயால் சுடுகிறார் வடை

எம் வம்சத்துக்கு நீங்கா

பழியை சுமத்தி மகிழ்கிறார் .

 

ச்சீ ! ச்சீ !

வாயால் சுடுவது வடையல்ல

வயிற்றை நிறைப்பதே வடையாகும் !

வடையின் வலியை புரிந்திடுங்கள்!

அந்த ’ச்சீ’ யின் வாயை தைத்திடுங்கள்!

 

சுபொஅ.

04/03/24


சோற்றுப் பானை பொய்சொல்லுமோ ?.

Posted by அகத்தீ Labels:

 

புள்ளிவிவரங்கள்

பொய்சொல்லலாம்

சோற்றுப் பானை

பொய்சொல்லுமோ ?.

 

பொருளாதாரப் புலிகள்

புளுகித் தள்ளலாம்

பசிக்கும் வயிற்றுக்கு

புளுகத் தெரியுமோ ?

 

ஊடக அடியாட்கள்

ஊதிப்பெரிதாக்கலாம்

கனவுக் கத்திரிக்காய்

கறிக்கு உதவுமோ ?

 

மதபோதை அதிகார போதை

வெறியாட்டம் போடலாம்

மானிட மென்பது புல்லோ? – அன்றி

மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?

 

[ கடைசி இரு வரிகள் புரட்சிக்கவி பாரதிதாசனிடம் உரிமையோடு எடுத்தாண்டது ]

 

சுபொஅ.

26/02/2024.